விடுபட்ட விவசாயிகளுக்கு பெஞ்சல் புயல் நிவாரணம் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், விடுபட்ட விவசாயிகளுக்கு, பெஞ்சல் புயல் நிவாரணம் கிடைக்க விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகையை, பெரும்பாலான விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
புள்ளி விபரங்கள் அனுப்பியபோது, பல விவசாயிகளின் வங்கி கணக்கு எண் தவறாகவும், சில வங்கிகளில் கணக்கு எண்ணை சரியாக இணைக்காததாலும், ஐ.எப்.எஸ்.சி., கோடு எண்கள் தவறாகவும் உள்ளதால், பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளை, வேளாண் துறை யினர் சரிசெய்து, விவசாயிகளின் பட்டியலை, வருவாய்த்துறைக்கு மீண்டும் வழங்கியுள்ளனர்.
ஆனால், தாசில்தார்கள் எவ்வித காரணமும் இல்லாமல் நிறுத்தி வைத்து, ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பேருக்கு மட்டும் சரி செய்து அனுப்பும் நிலை உள்ளது.
இதனால், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 450 விவசாயிகள் முதல் 900 விவசாயிகள் வரை, நிவாரணம் கிடைக்காமல் உள்ளனர். இதற்கு, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.