காஞ்சிபுரத்தில் எல்.என்.ஜி., நிலையம் அமைக்கிறது 'திங்க் காஸ்' நிறுவனம்

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் வல்லத்தில் எல்.என்.ஜி., எரிவாயு நிரப்பும் நிலையத்தை, 'திங்க் காஸ்' நிறுவனம் அமைத்து வருகிறது. இது செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எண்ணுார் துறைமுகத்தில், எல்.என்.ஜி., எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ளது.

அங்கிருந்து, லாரிகள் மற்றும் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயுவை எடுத்து சென்று, தமிழகம் முழுதும் வினியோகம் செய்வதற்கு ஏழு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 'திங்க் காஸ்' நிறுவனம் மேற்கொள்கிறது. இந்நிறுவனம், வீடு, தொழிற்சாலைக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, குழாய் வழித்தடம் அமைக்கிறது.

சில அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் துவங்கி உள்ளது.

தற்போது, நீண்ட துாரம் செல்லும் கனரக வாகனங்களுக்கு எரிபொருள் சேவை வழங்க, எல்.என்.ஜி., எரிவாயு நிரப்பும் நிலையத்தை, காஞ்சிபுரத்தில் உள்ள வல்லத்தில், திங்க் காஸ் அமைத்து வருகிறது. இது, வரும் செப்., மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இதன் வாயிலாக, எல்.என்.ஜி.,யில் இயங்கும் கனரக வாகனங்களுக்கு நேரடியாக எல்.என்.ஜி., வினியோகம் செய்ய முடியும். இந்த நிலையத்தின் வாயிலாக வல்லம், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரத்தில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்பட உள்ளது.

Advertisement