முதல்வர் காப்பீடு திட்ட சிகிச்சைக்கு பணம் கேட்பதாக நோயாளிகள் புகார்

சென்னை:தனியார் மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், மருத்துவமனை நிர்வாகத்தினர் கணக்கில் காட்டாமல், கூடுதல் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல், உயிர் காக்கும் சிகிச்சை பெறும் வகையில், முதல்வர் காப்பீடு திட்டம், 2009ல் செயல்படுத்தப்பட்டது.

பின், 2018 முதல், மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் இணைந்து, முதல்வர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை உட்பட, 1,090 சிகிச்சை முறைகள், எட்டு தொடர் சிகிச்சைகள், 52 பரிசோதனை முறைகளுக்கு, மருத்துவ காப்பீடு வழிவகை செய்கிறது.

அதன்படி, 800 அரசு மற்றும் 900 தனியார் மருத்துவமனைகளில், முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

இந்த திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் மற்றும் உயர் சிறப்பு சிகிச்சைகளுக்கு, 22 லட்சம் ரூபாய் வரை, அரசு செலவிடுகிறது. அதன்படி, 1.44 கோடி குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.

இந்நிலையில், முதல்வர் காப்பீடு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தால், கணக்கில் காட்டாமல் கூடுதல் பணம் வசூலிப்பதாக, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

அவர்களில் ஒருவர் கூறியதாவது:

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். முதல்வர் காப்பீடு திட்டத்தில், 2.5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் இன்றி சிகிச்சை பெறலாம்.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம், 1 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்தால்தான் அறுவை சிகிச்சை செய்வோம் என்றனர். அந்த பணத்துக்கு ரசீது தர மாட்டோம்; பணம் செலுத்திய தகவலை வெளியே சொன்னால், அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம் என, வெளிப்படையாக கூறினர்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், இவ்வாறு பணம் வசூலிப்பதாக உறவினர் வாயிலாக கேள்விப்பட்டேன். திருச்சியில் எனக்கே நடந்துள்ளது. இது பேராசையால் நடக்கும் மோசடி. அரசு தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் நல்வாழ்வு துறையில் விசாரித்தபோது, 'கூடுதல் கட்டணம் கேட்டாலோ, சிகிச்சை அளிக்க மறுத்தாலோ 1800 4253 993 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்' என அதிகாரிகள் கூறினர்.

Advertisement