கிடப்பில் சாக்கடை கட்டுமான பணி ப.வேலுார் டவுன் பஞ்., மக்கள் அவதி



ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 16வது வார்டு செட்டியார் தெருவில், கடந்த, 50 நாட்களுக்கு முன் அங்கிருந்த பழைய சாக்கடையை அகற்றிவிட்டு, புதிய சாக்கடை அமைக்கும் பணி தொடங்கியது.
இதற்காக, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, அள்ளிய மண், கற்களை சாலையில் கொட்டியுள்ளனர். ஆனால், அதற்கு பின் எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
மேலும், அங்குள்ள வணிக நிறுவனங்களை திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலகத்திற்கு சென்று, நேற்று
புகாரளித்தனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சாக்கடை கட்டுமான பணி கிடப்பில் உள்ளதால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மேலும், வீட்டுக்குள் செல்ல முடியாமல் பலகை அமைத்து ஆபத்தான முறையில் சென்று வருகிறோம். மண், கற்கள் சாலையிலேயே கிடப்பதால், இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாக்கடை அமைக்கும் பணியை விரைவில் முடிக்க வேண்டும்,''
என்றனர்.

Advertisement