நான்கு வழிச்சாலையில் மறியல்

திருமங்கலம்: சமயநல்லூர் விருதுநகர் நான்கு வழி சாலையில் திருமங்கலம் பைபாஸில் நகராட்சி எல்லைக்குட்பட்ட குதிரைச்சாரிகுளம் பகுதி உள்ளது. திருமங்கலம் நகர் பகுதியில் இருந்து இந்த இடத்திற்கு செல்வதற்கு நான்கு வழி சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த இடத்தின் முன் பகுதியில் நான்கு வழிச்சாலையில் இரண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு உள்ளது. இருந்தும் இந்த பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் நடந்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த சர்வீஸ் ரோட்டில் மராமத்து பணிகள் செய்து அதன் அகலத்தை குறைத்துள்ளனர். இதனால் ஏற்கனவே விபத்து அபாயத்தில் சிக்கி உள்ள இந்தப் பகுதியில் கூடுதல் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

எனவே பழையபடியே சர்வீஸ் ரோட்டை அமைக்க வேண்டும் எனக்கூறி நேற்று மாலை குதிரைச்சாரிகுளம் பழனியாபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் நான்கு வழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement