போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்

5


திருப்பூர்: மாவட்ட மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளுக்கு போக்குகாட்டி, இடத்தை மாற்றி, மாற்றி போலி கிளினிக் நடத்தி வந்த, பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள 65 வயது ஆசாமி நேற்று நான்காவது முறையாக பிடிபட்டார்.


திருப்பூர், முருகம்பாளையம், சூர்ய கிருஷ்ணா நகரில் செயல்படும் இமாலயா மெடிக்கல் ஸ்டோரில் மருந்து விற்பனை செய்பவர், பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்ப்பதாக, மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மீரா தலைமையில் குழுவினர், வீரபாண்டி இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி மற்றும் போலீசார், அங்கு ஆய்வு நடத்தினர். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோலி அகஸ்டின், 65, மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது.



அவரை போலீசார் கைது செய்தனர். இருப்பு வைத்திருந்த மருந்து, மாத்திரை, ஊசிகளை பறிமுதல் செய்த மருத்துவ துறை அதிகாரிகள், கிளினிக் மற்றும் மருந்தகத்தை பூட்டி, 'சீல்' வைத்தனர்.


இணை இயக்குநர் மீரா கூறுகையில், “மருந்தகத்துக்குள் சிறிய அறையில் இரண்டு படுக்கைகளுடன் கிளினிக் செயல்பட்டு வந்தது. மருந்து, மாத்திரையுடன் ஊசி செலுத்தி வந்த இவர், எவ்வித ரசீதும் தராமல் மருத்துவம் பார்த்து, நோயாளிகள் உடன் வருவோரிடம் பில் எதுவும் தராமல், 'ஜிபே, போன் பே'வில் பணம் பெற்றுள்ளார்.


நிறைய மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்துள்ளார். பிளஸ் 2 படித்த சான்றிதழ் வைத்துள்ளார். மருந்து கடை நடத்த உரிமம் பெற்றுள்ளாரா என விசாரணை நடக்கிறது,” என்றார்.


முன்னதாக, ஜோலி அகஸ்டின் போலி கிளினிக் நடத்தி, 2017ல் திருப்பூரிலும், 2019ல் திருப்பூரில் வேறு ஒரு இடத்திலும், 2024 ஏப்ரலில் முருகம்பாளையத்திலும் கைதாகி உள்ளார். தற்போது சூர்ய கிருஷ்ணா நகரில் கிளினிக் நடத்தி, நான்காவது முறையாக சிக்கியுள்ளார்.


ஜெயிலில் இருந்து வந்ததும், இடம் பார்த்து போலி கிளினிக் துவங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்காவிடில், மீண்டும் ஜாமின் பெற்று வந்ததும், எங்காவது கிளினிக் அமைத்து மக்களின் உயிரோடு விளையாடுவார் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.

Advertisement