ரூ.1 கோடி கேட்டு கொலை மிரட்டல் கடிதத்தால் வேலுமணி அதிர்ச்சி


கோவை: அ.தி.மு.க., தலைமை நிலைய செயலரான வேலுமணி, கோவை குனியமுத்துாரில் வசிக்கிறார்.



இவரது வீட்டுக்கு அனுப்புனர் முகவரி இல்லாமல் வந்திருந்த கடிதத்தில், '1 கோடி ரூபாய் பணம் கொடுக்காவிட்டால், வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவோம்' என எச்சரிக்கை விடுக்கும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.


இதையடுத்து, 'வேலுமணி மற்றும் அவரது குடும் பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, வேலுமணியின் வக்கீல் தாமோதரன், போலீசில் புகார் கொடுத்தார். கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜூலை 30க்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம். எங்களது நபர்கள் உங்கள் அருகில் இருக்கின்றனர். எங்கள் அமைப்புக்கு பணம் தேவை. உங்களிடம் நிறைய கருப்பு பணம் இருக்கு; அதுக்கு எங்களிடம் ஆதாரம் இருக்கு.


ஒரு பேக்கில் 1 கோடி ரூபாய் பணத்தை வைத்து, 25ம் தேதி பிற்பகல் 2:00 முதல், 2:30 மணிக்குள் காளப்பட்டி - வெள்ளானைப்பட்டி ரோட்டில், கலியபெருமாள் குட்டை அருகில் குப்பை மேட்டில், பேக்கை வச்சுட்டு போயிடலாம்; எங்கள் ஆட்கள் எடுத்துக் கொள்வர்.


பணப்பையில், 'ஜி.பி.எஸ்., டிராக்கிங் டிவைஸ்' வைக்காதீங்க. இப்படிச் செய்தால், எங்கள் பக்கத்துல இருந்து எந்தப் பிரச்னையும் வராது.



நீங்கள் போலீசுக்குப் போனாலோ, எங்களை பிடிக்க முயற்சித்தாலோ, உங்கள் குடும்பத்தில், மூன்று பேரை மூன்று மாதத்துக்குள் கொல்வோம். இது, வெறும் 'மெசேஜ்' இல்லை; எச்சரிக்கை.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


கடிதத்தின் பின்பக்கத்தில், 'கூகுள் மேப்' இணைக்கப்பட்டிருக்கிறது. அதில், 'டிராப் தி பேக் ஹியர்' (பையை இங்கே போடவும்) என கையால் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் உண்மை தன்மை தொடர்பாக, கோவை குனியமுத்துார் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Advertisement