மெட்ரோவில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர் கைது 

பெங்களூரு:மெட்ரோ ரயிலில் பயணித்த இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, 'மெட்ரோ சிக்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் வெளியிட்டார். அந்த பக்கத்தில் 13 ஆபாச வீடியோக்களை பதிவிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராம் கணக்கை 60,00 பேர் பின்தொடர்ந்து இருந்தனர்.

இளம்பெண்கள் ஆபாச வீடியோ வெளியிடப்பட்டது, பயணியர் மத்தியில் கொந்தளிப்பை கிளப்பியது. இதனால் ஆபாச வீடியோக்களை பதிவிட்டவரே அதை அழித்தார். வீடியோ பதிவிட்டவர் மீது பனசங்கரி போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், வீடியோவை பதிவிட்டவர் ஹாவேரியை சேர்ந்த திகந்த், 30 என்பதும், அவர் பெங்களூரு பீன்யாவில் வசிப்பதும் தெரிந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement