அலமாட்டி அணை நீர்மட்டம் உயர்த்த மத்திய அரசுக்கு சிவகுமார் நெருக்கடி

விஜயபுரா:''அலமாட்டி அணை நீர்மட்டத்தை 524 மீட்டராக உயர்த்தும் அறிவிப்பை வெளியிட கோரி, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம்,'' என்று துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.

விஜயபுராவின் கோல்ஹாராவில் நேற்று பல்வேறு வளர்ச்சி பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

கிருஷ்ணா மேலணை திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக 5,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். இந்த திட்டத்தை தேசிய திட்டமாக மாற்ற வேண்டும் என்பது எங்கள் அரசின் குறிக்கோள். அலமாட்டி அணையின் நீர்மட்டத்தை 524 மீட்டராக உயர்த்தும் அறிவிப்பை வெளியிட கோரி, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம். பசவண்ணர் பிறந்த இந்த மண்ணில் நிற்பது எனக்கு பெருமையாக உள்ளது.

பணக்காரர்கள் தங்கள் சொத்துகளை பற்றி சிந்திக்கின்றனர். பசியுள்ள மக்கள் வேலை, உணவு பற்றி கவலைப்படுகின்றனர். நாங்கள் ஏழைகள் வாழ்க்கையை பற்றி சிந்திக்கிறோம்.

பசவண்ணர் விரும்பியபடி அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கும் அரசை நடத்துகிறோம். எங்கள் அரசு பசவண்ணரை கலாசார தலைவராக அறிவித்தது.

பிறப்பு, இறப்புக்கு இடையில் நான் என்ன சாதிக்கிறோம் என்பது முக்கியம். பஞ்சாரா சமூகத்தினர் வலி எனக்கு புரிகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுப்போம்.

மாண்டியாவிற்கு பிறகு விஜயபுரா அதிக கரும்பு உற்பத்தி செய்யும் மாவட்டமாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். இங்கு நிறைய தொழிற்சாலைகள் கொண்டு வந்து, வேலைவாய்ப்பு உருவாக்குவோம். நாங்கள் வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என்றால் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். எங்கள் அரசு 1,11,111 பேருக்கு நில உரிமை பத்திரம் வழங்கி உள்ளது. ஐந்து வாக்குறுதி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement