'வயது வரம்பை உயர்த்தாமல் பி.சி., பிரிவினருக்கு துரோகம்'

சென்னை : 'ஊரக வளர்ச்சி உதவியாளர் பணிகளுக்கு, வயது வரம்பை உயர்த்தாமல், பிற்படுத்தப்பட்டோருக்கு தி.மு.க., அரசு துரோகம் செய்கிறது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்ககத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாக காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஜீப் ஓட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களை, மாவட்ட அளவில் நிரப்பிக் கொள்ளலாம் என, அனைத்து கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆள் தேர்வு நடப்பதால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான வயது வரம்பு, 35-ல் இருந்து 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது; இது சரியான நடவடிக்கை.
இதேபோல், பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 37 ஆகவும், பி.சி., - எம்.பி.சி., வகுப்பினருக்கான வயது வரம்பை 39 ஆகவும் உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதை செய்யவில்லை. இது சமூக அநீதி.
அரசின் தவறுக்காக, அரசு வேலை தேடும் அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது.
எத்தனை ஆண்டுகள் பணி நியமனம் நடக்கவில்லையோ, அத்தனை ஆண்டுகள் வயது வரம்பு விலக்கு அளிப்பது தான் இயற்கை நீதி.
அவ்வாறு செய்ய மறுப்பது, வேலை தேடும் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். அந்த துரோகத்தை தான் தி.மு.க., அரசு செய்து கொண்டிருக்கிறது. ஊரக வளர்ச்சி இயக்ககத்தின் கீழ் காலிப் பணியிடங்களுக்கு, பி.சி., - எம்.பி.சி., பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.







மேலும்
-
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை; 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!
-
திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்; 5 கி.மீ. தொலைவு காத்திருந்து தரிசனம்
-
காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; 10 பேர் கும்பல் வெறிச்செயல்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை