மாதந்தோறும் மின்கட்டணம் முதல்வருக்கு நினைவூட்டல்

கோவை : மாதந்தோறும் மின்கட்டண கணக்கீட்டு முறையை, உடனடியாக அமல்படுத்த, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர், தமிழக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

மாதந்தோறும் மின் கட்டண கணக்கீட்டு முறையினை அமல்படுத்தினால், மின் வாரியம் மற்றும் பொதுமக்களுக்கு நிதி தொடர்பான நன்மை கிடைக்கும். மாதந்தோறும் மின் கட்டணம் வசூலித்தால், மின் வாரியத்திற்கு நிலையான வருமானம் கிடைக்கும். இது பணப்புழக்கத்தையும், ஊழியர்களின் செயல்திறனையும் அதிகரிக்கும்.

மாத வருமானம் பெறுவோர், ஊதியதாரர்கள் மற்றும் சிறு தொழில் புரிவோருக்கு, மாதந்திர நிதி நிலைக்கு ஏற்றதாக இருக்கும். தேர்தல் அறிக்கையில், இது ஒரு முக்கியமான வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement