திருச்செந்துார் ரயிலில் இடநெருக்கடி தொடர்கிறது மக்கள் தவிப்பு

1

உடுமலை : 'திருச்செந்துார் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், நெரிசலில் தவித்தபடி மக்கள் பயணிப்பது தொடர்கதையாக உள்ளது.

திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக திருச்செந்துாருக்கு இயக்கப்படும் விரைவு ரயிலுக்கு, உடுமலை பகுதி மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

நாள்தோறும், உடுமலையில் இருந்து சராசரியாக, 400க்கும் அதிகமான பயணியர் இந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

ஆனால், ரயிலில் போதிய பெட்டிகள் இல்லாததால், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஏறும் பயணியர், மிகுந்த சிரமப்படுகின்றனர். இடநெருக்கடியில் பெட்டிகளில் ஏறவும் முடிவதில்லை.

போதிய இடம் இல்லாமல், 7 மணி நேரத்துக்கும் அதிகமான பயண துாரம் செல்ல வேண்டியிருப்பதால், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கின்றனர். எனவே இந்த ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

பல்வேறு சங்கத்தினர் சார்பிலும், ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பினர். திருச்செந்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பெட்டிகள் கொண்ட ரயில்களை கையாள இடவசதியில்லை.

இதனால், பாலக்காடு - திருச்செந்துார் ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என, ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைத்து, உடுமலை பகுதி பயணியரின் சிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Advertisement