குன்னுாரில் 65வது பழ கண்காட்சி துவக்கம்; சுற்றுலா பயணிகளுக்கு நான்கு நாள் கொண்டாட்டம்

குன்னுார் : குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 65வது பழ கண்காட்சி நேற்று துவங்கியது.
நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார். கண்காட்சியை துவக்கி வைத்த அரசு கொறடா ராமச்சந்திரன் பேசுகையில், ''கடந்த காலங்களில் ஊட்டிக்கு மட்டுமே சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், குன்னுார், கூடலுார்,கோத்தகிரி என அனைத்து பகுதிகளுக்கும் வர துவங்கினர்.
இதை தொடர்ந்து, கோடை விழா அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. குன்னுார் சிம்ஸ்பூங்காவில் வெளிநாட்டு மரங்கள் அதிகம். ஊட்டியில், உலகில் உள்ள மலர்களை கொண்டு சிறப்பான மலர் கண்காட்சி நடத்தியது போன்று, இங்கு பல வகை பழங்களை கொண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. நீலகிரியில், பழ உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில்,''நீலகிரி மாவட்டத்தில், 2,400 ஏக்கர் பரப்பளவில் பழ சாகுபடி செய்யப்படுகிறது. குன்னுார், ஆப்பிள், பிளம்ஸ், பேரி, பீச், மங்குஸ்தான் துரியன், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களின் சாகுபடியில் முதன்மையாக விளங்குகிறது,'' என்றார்.
விழாவில், 'விடுமுறை பிக்னிக்' என்ற பெயரில், 'எலுமிச்சை பழங்களில்; பிரம்மாண்ட எலுமிச்சை; பழரச கோப்பை; கடற்கரை குடை; பழமையான கார்; பழ கேக்; பழ ஐஸ்கிரீம்; தொப்பி; விசில்; கண்ணாடி; நீர் சறுக்கு மட்டை;பழ கூடைப்பந்து; இளநீர்,' போன்ற வடிவமைப்புகள், 3.8 லட்சம் டன் எடையுள்ள பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், கரூர், தென்காசி, வேலுார், திருப்பத்துார், கடலுார், பெரம்பலுார், திருச்சி, புதுக் கோட்டை சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துறைகளின் அரங்குகளில் பல்வேறு பழங்கள் வைக்கப்பட்டன. எம்.ஆர்.சி., ராணுவ பேண்ட் வாத்திய இசை குழுவினரின் நிகழ்ச்சி, பல்வேறு நாட்டிய குழுவினரின் பரதநாட்டியம், அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கூடுதல் கலெக்டர் சங்கீதா, தோட்ட கலை துறை இணை இயக்குனர் சிபிலாமேரி உட்பட பலர் பங்கேற்றனர். வரும், 26ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.
சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சியில் தனியார் அரங்குகளும் அமைக்கப்பட்டு பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதில், நியூசிலாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, ராக்கெட் ஆப்பிள், நீலகிரி வனப்பகுதியில் விளைந்த இரண்டரை கிலோ எடை கொண்ட நீலகிரி எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. பழ விவசாயி தியாகராஜன் கூறுகையில்,'' நீலகிரியில் பழ உற்பத்தி குறைந்து விட்டது. மாங்காய் பிளம்ஸ் உட்பட, 16 வகையான பிளம்ஸ் பழங்கள், 18 வகை ஆப்பிள் உட்பட, 28 வகையான பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார். வியாபாரி ஈஸ்வரன் கூறுகையில், ''நீலகிரிக்கு உரித்தான, பீச் பேரி, பிளம்ஸ், ஊட்டி ஆரஞ்சு ஆகியவை அழிவின் பிடியில் உள்ளன. நகா, தவிட்டு, குரங்கு பழம், விலாத்தி, முள்ளு பழம் , ஊசி கலா, சாப்பக் கிழங்கு , மஞ்சள் முழாம் புனுகு, அத்தி உள்ளிட்ட, 60 வகையான பழங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும்
-
தென்காசி அருகே சோகம்: மின்சாரம் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலி
-
நக்சல் அமைப்பு தலைவன் பப்பு லொஹாரா உட்பட இருவர் சுட்டுக்கொலை
-
கேரளாவில் கனமழைக்கு இடிந்து விழுந்த வீடு, மரங்கள்; சுற்றுலா தலங்கள் மூடல்
-
டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு; ஒரு சவரன் ரூ.71,920!
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்