300 வன ஊழியர்கள் பங்கேற்பு

கூடலுார் : நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் துவங்கிய யானைகள் கணக்கெடுப்பு பணியில், 300 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம், கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலுார், நீலகிரி, முதுமலை, மசினகுடி வனக்கோட்டங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

இதற்காக, முதுமலை, 24 பகுதியாகவும்; கூடலுார், 30 பகுதியாகவும்; மசினகுடி, 33 பகுதியாகவும்; நீலகிரி, 14 பகுதியாகவும் பிரித்து, பகுதிக்கு, 3 முதல் 4 வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கணக்கெடுப்பு பணியின் போது, ஆண் யானை, பெண் யானை, குட்டிகள் மற்றும் மக்னா யானை (தந்தமில்லாத ஆண் யானை) குறித்த விபரங்களை, தேதி மற்றும் நேரத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'இப்பணியில், 300 வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கணக்கெடுப்பு பணியில் போது பதிவு செய்யப்படும் விவரங்களின் அடிப்படையில், யானைகளின் எண்ணிக்கை குறித்து விபரம் கணக்கிட்டு அறிவிக்கப்படும்,' என்றனர்.

Advertisement