மலை பகுதிகளில் மழை அதிகரிக்க வாய்ப்பு நீலகிரிக்கு ரெட் அலர்ட்! தீவிர கண்காணிப்பில் 283 அபாய பகுதிகள்

குன்னுார்: நீலகிரிக்கு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்து, அனைத்து துறை அலுவலர்களும் 'அலர்ட்டாக' இருக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென் மேற்கு பருவ மழையின் போது, ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த, 24 மணி நேரத்தில் வலுவடைய உள்ளது. இதனால், 'மேற்கு தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யும்,' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, 'கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில், 200 மி.மீ., வரை மழை அளவு பதிவாகும். அரபி கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவாகும் மழையால், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அதிக மழை இருக்கும்,' என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலுார், பந்தலுார், குந்தா, ஊட்டி மட்டுமின்றி, குன்னுாரிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், குன்னுார்,- மேட்டுப்பாளையம், கூடலுார், -பந்தலுார் பகுதிகளில் சாலையோர மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள, 283 பேரிடர் பகுதிகளில், முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும், வி.ஏ.ஓ.,க்கள், பேரிடர் குழுவினர், 'அலர்ட்டாக' இருக்க வருவாய் துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மாவட்டத்தில் தீயணைப்பு துறையின் 'கமாண்டோ' படையினர் ஊட்டி, கூடலுார் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். குன்னுார் உட்பட பல பகுதிகளில் தீயணைப்பு உபகரணங்கள் இயங்குவது குறித்து தினமும் செயல் விளக்கம் நடந்து வருகிறது.

நிவாரண முகாம்கள் தயார்



மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், '' நீலகிரி மாவட்டத்துக்கு ஏற்கனவே ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்ட

நிலையில், 25, 26ம் தேதிகளுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் கூட்டப்பட்டு, முக்கிய நடவடிக்கையாக, குடிநீர், மின்சாரம், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

283 பேரிடர் அபாய பகுதிகளில், 42 மண்டல குழுவினர் கண்காணித்து, தகவல்களை அளித்து வருகின்றனர். பேரிடர் தகவல்களை தெரிவிக்க இரவு பணியில் அனைத்து உள்ளாட்சிகள், தாலுகா அலுவலகங்களில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவசர காலங்களில், 1077 என்ற இலவச எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம்,'' என்றார்.

Advertisement