லாரி மோதி கவிழ்ந்த கார்; தப்பிய குடும்பத்தினர்

1

திருப்பூர் : தாராபுரம் பை பாஸ் ரோட்டில், வேகம் குறைத்த கார் மீது லாரி மோதியதில் எதிர் திசையில் ெசன்று கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்ட வசமாக காரில் இருந்த நான்கு பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

திண்டுக்கல், விராலிக்கோட்டை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் பிரதீப், 42. மனைவி பெரியநாயகி, 32, மகன் சித்ரன், 9 மகள் சைந்தவி, 6 ஆகியோருடன் காரில், ஈரோடு நோக்கி பயணித்தார்.

நேற்று மதியம், 1:30 மணியளவில் தாராபுரம் பைபாஸ் ரோட்டில் ராணி கல்லுாரி அருகே, உயரமான கல்வெர்ட்டைக் கண்டதும் காரின் வேகத்தை பிரதீப் குறைத்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர்கள் கார் மீது மோதியது. இந்த விபத்தில், கார் ரோட்டின் எதிர்புறத்தில் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

காரினுள் சிக்கிய நான்கு பேரையும் அவ்வழியாகச் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். லேசான காயங்களுடன் அவர்கள் தப்பினர். போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர். தாராபுரம் பைபாஸ் ரோட்டில் பல இடங்களில் உயரமான சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு அடி அளவு உயரத்தில் உள்ளது. பைபாஸ் ரோட்டில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் திடீரென உயரமான பகுதி என்பதால் பிரேக் பிடித்து விபத்து ஏற்படுகிறது.

கடந்த வாரம் இந்த இடத்தில் மூன்று கார்கள் மோதி, ஒரு கார் தீப் பிடித்து எரிந்தது. இது போன்ற உயரமாக உள்ள தடைகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement