பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை; தலைவர் பதவி பறிப்பு குறித்து அன்புமணி வேதனை

10

தர்மபுரி: "பயங்கர மன உளைச்சல், தூக்கம் வரவில்லை" என தலைவர் பதவி நீக்கம் குறித்து பா.ம.க., தலைவர் அன்புமணி வேதனை தெரிவித்தார்.


@1brலோக்சபா தேர்தலுக்குப் பின், பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது. இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில், அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார். இதன் பிறகு ராமதாஸ் நடத்தும் கூட்டத்தை அன்புமணி புறக்கணித்து வருகிறார்.


அன்புமணியுடன் மனக்கசப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், மனக்கசப்பு இல்லை. இனிப்பு தான் இருக்கிறது. இனிப்பு செய்தி சொல்கிறேன் என்று பதில் அளித்து இருந்தார்.


இந்நிலையில் முதல்முறையாக தலைவர் பதவி நீக்கம் குறித்து, தர்மபுரியில் நடந்த பா.ம.க., கட்சி கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: கடந்த ஒரு மாதமாக பயங்கர மன உளைச்சல். தூக்கம் வரவில்லை. எனக்குள் தினமும் பல கேள்விகள் எழுகிறது. நான் என்ன தவறு செய்தேன்? தூங்குவதற்கு முன், பின் இதுதான் மனதில் தோன்றுகிறது. என்ன தவறு செய்தேன்? ஏன் மாற்றப்பட்டேன்.


எனக்குத் தெரிந்து நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. என்னுடைய நோக்கம்,லட்சியம், கனவு எல்லாம் ராமதாஸின் லட்சியத்தை நிறைவேற்றுவது தான். இவ்வளவு காலமாக, ராமதாஸ் சொன்னதை அனைத்தும் செய்து முடித்தவன். இனியும், ராமதாஸ் சொல்வதை, நிச்சயமாக ஒரு மகனாக, கட்சியின் தலைவராக செய்து முடிப்பேன். அது என்னுடைய கடமை. இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement