கி.கிரியில் அன்புமணிக்கு பா.ம.க.,வினர் வரவேற்பு

கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டம், கடத்துாரில், கடந்த சில வாரங்களுக்கு முன் உயிரிழந்த, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் கனல் ராமலிங்கத்தின் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று, பா.ம.க., தலைவர் அன்புமணி சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வந்தார். காலை, 11:00 மணியளவில், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே வந்த அவருக்கு, வன்னியர் சங்க மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், கிரேன் மூலம், 12 அடி உயர ஆப்பிள் மாலையை அணிவித்து, பா.ம.க.,வினர் வரவேற்றனர். மாவட்ட மகளிரணியை சேர்ந்தவர்கள் வழிநெடுக மலர் துாவி வரவேற்றனர்.

மாவட்ட செயலாளர்கள், மோகன்ராம், கோவிந்தராஜ், மேகநாதன் மற்றும் வன்னியர் சங்கம், பசுமைத்தாயகம், பா.ம.க., இளைஞரணியினர் உள்பட, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேகநாதனை தவிர, யாரும் போகாத நிலையில், நேற்று மாவட்டத்திலுள்ள அனைத்து, மாவட்ட பொறுப்பாளர்களும் அன்புமணிக்கு
வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement