இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன்: சுதர்சன், அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பு

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2--6), லார்ட்ஸ் (ஜூலை 10--14), மான்செஸ்டர் (ஜூலை 23--27), ஓவலில் (ஜூலை 31--ஆக. 4) நடக்கவுள்ளன.
தேர்வுக்குழு கூட்டம்: இத்தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைமையகத்தில் நடந்தது.
பி.சி.சி.ஐ., செயலர் தேவாஜித் சைகியா, தேர்வுக்குழு தலைவர் அகார்கர், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சமீபத்தில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதால், அணி தேர்வு பற்றி அதிக எதிர்பார்ப்பு நிலவியது. முடிவில் அகார்கர், 18 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலை வெளியிட்டார்.
புதிய டெஸ்ட் கேப்டனாக பஞ்சாப் 'பேட்டர்' சுப்மன் கில் 25, நியமிக்கப்பட்டார். கடந்த 2020ல் மெல்போர்ன் டெஸ்டில் (எதிர்: ஆஸி.,) அறிமுகமான கில், இதுவரை 32 போட்டியில் (1893 ரன், 5 சதம்) பங்கேற்றுள்ளார். துணை கேப்டன் பொறுப்பு, விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட்டிற்கு 27, வழங்கப்பட்டது.
இரண்டு புதுமுகம்: தமிழக இடதுகை பேட்டர் சாய் சுதர்சன், மத்திய பிரதேச வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு தேர்வாகினர். இருவரும் இங்கிலாந்தில் நடக்கும் 'கவுன்டி' போட்டியில் விளையாடி உள்ளனர். இதில் சுதர்சன், மாற்று துவக்க வீரராக அல்லது 3வது இடத்தில் களமிறங்கலாம்.
கருண் தேர்வு: எட்டு ஆண்டுகளுக்கு பின் கருண் நாயர், டெஸ்ட் அணிக்கு திரும்பினார். கடைசியாக 2017ல் தர்மசாலாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ஷர்துல் தாகூர், டெஸ்ட் அணிக்கு திரும்பினார். கடந்த முறை இங்கிலாந்து தொடருக்கு தேர்வான இவர், ஓவல் டெஸ்டில் அரைசதம் விளாசி, இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷாப் பன்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவிந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
இளம் வீரர்
பட்டோடி (21), சச்சின் (23), கபில்தேவ் (24), ரவி சாஸ்திரிக்கு (25) பின் இந்திய டெஸ்ட் அணியின் 5வது இளம் கேப்டன் ஆனார் சுப்மன் கில் (25 வயது).
பும்ரா சந்தேகம்
இங்கிலாந்து தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 5 போட்டியிலும் விளையாடுவது சந்தேகம். 3 அல்லது 4 டெஸ்டில் விளையாடலாம். அடிக்கடி காயத்தால் பாதிக்கப்படுவதால் இவருக்கு டெஸ்ட் அணி கேப்டன் பதவி வழங்கப்படவில்லை.
ஷ்ரேயஸ், ஷமி நீக்கம்
டெஸ்ட் அணியில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர், முகமது ஷமி நீக்கப்பட்டனர். இதுகுறித்து அகார்கர் கூறுகையில், ''கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஷமிக்கு டெஸ்டில் விளையாடக்கூடிய உடற்தகுதி இல்லை என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். இதனால் தேர்வு செய்யவில்லை. சமீபத்திய ஒருநாள், உள்ளூர் போட்டியில் ஷ்ரேயஸ் சிறப்பாக விளையாடிய போதும், டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கொடுக்க முடியவில்லை,'' என்றார்.
ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற ஹர்ஷித் ராணா, சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படவில்லை.
இரு தமிழக வீரர்கள்
டெஸ்ட் அணியில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் என, இரண்டு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் சென்னையில் பிறந்த இடது கை 'டாப்-ஆர்டர்' பேட்டர் சுதர்சன் 23, இங்கிலாந்தில் நடக்கும் 'கவுன்டி' போட்டியில் 'சர்ரே' அணிக்காக (2023-24) பங்கேற்றார். உள்ளூர், பிரிமியர் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இவர், டெஸ்ட் அணிக்கு முதன்முறையாக தேர்வானார்.
இதுகுறித்து சுதர்சன் கூறுகையில், ''டெஸ்டில் விளையாடுவதே ஒரு கிரிக்கெட் வீரரின் முதல் இலக்காக இருக்கும். முதன்முறையாக இந்தியாவுக்காக டெஸ்டில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி,'' என்றார்.
குஜராத் ஆதிக்கம்
இந்திய அணிக்கு தேர்வான 18 வீரர்களில், 17 பேர் பிரிமியர் தொடரில் பல்வேறு அணிகள் சார்பில் விளையாடி வருகின்றனர். அபிமன்யு ஈஸ்வரனை, வீரர்கள் ஏலத்தில் எந்த ஒரு அணியும் வாங்க முன்வரவில்லை. குஜராத் அணிக்காக விளையாடும் 5 வீரர்கள், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளனர். லக்னோ, டில்லி சார்பில் தலா 3, ராஜஸ்தானின் 2, பஞ்சாப், மும்பை, சென்னை, ஐதராபாத் அணிகளின் தலா ஒரு வீரர், இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகினர்.
இதன் விபரம்
குஜராத்: சுப்மன் கில், சாய் சுதர்சன், வாஷிங்டர், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்
லக்னோ: ரிஷாப் பன்ட், ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப்
டில்லி: ராகுல், கருண், குல்தீப்
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல்
பஞ்சாப்: அர்ஷ்தீப் சிங்
மும்பை: பும்ரா
சென்னை: ஜடேஜா
ஐதராபாத்: நிதிஷ் குமார் ரெட்டி
ஐந்து 'வேகம்
வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து ஆடுகளத்திற்கு ஏற்ப இந்திய டெஸ்ட் அணியில் 5 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் மட்டும் தேர்வானார். இது தவிர, 6 பேட்டர், 2 விக்கெட் கீப்பர் பேட்டர், 4 'ஆல்-ரவுண்டர்' இடம் பெற்றுள்ளனர்.
அகார்கர் விளக்கம்
தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறுகையில், ''இந்திய டெஸ்ட் கிரிக்கெட் புதிய மாற்றத்தை நோக்கி செல்கிறது. சீனியர் வீரர்களான ரோகித், கோலி ஓய்வு பெற்றதால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இதனை இளம் வீரர்கள் பூர்த்தி செய்வர். கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டது சரியான முடிவாக கருதுகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்,'' என்றார்.
பிரிமியர் தொடருக்கு முன்னுரிமையா
பிரிமியர் தொடரின் 18வது சீசனில் அசத்தி வரும் சாய் சுதர்சன் (638 ரன்), பிரசித் கிருஷ்ணா (21 விக்கெட்), அர்ஷ்தீப் சிங் (16) இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வாகினர். ஆனால் ரஞ்சி கோப்பையில் (2024-25) சிறப்பாக விளையாடிய யாஷ் ரத்தோட் (960 ரன்), சுபம் சர்மா (943), ஹர்ஷ் துபே (69 விக்கெட்), ஷாம்ஸ் முலானிக்கு (44) போன்ற திறமையான வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.