கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று பயம் கூட்டுறவு சங்க தேர்தல் இப்போதைக்கு இல்லை
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள சூழலில், தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தினால், கூட்டணி கட்சியினருக்கு பதவி வழங்குவதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக தி.மு.க., மேலிடம் கருதுகிறது. இதனால், இப்போதைக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து, கூட்டுறவு துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், 7,696 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவை தவிர, பால் வளம், மீன் வளம், கைத்தறி உள்ளிட்ட 14 துறைகளில், 14 செயல் பதிவாளர்கள் கட்டுப்பாட்டில் 10,000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
கடந்த 2018ல் கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு, ஒவ்வொரு சங்கத்துக்கும் நிர்வாகக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக்காலம் 2023ல் முடிவடைந்தது.
இதையடுத்து, புதிய நிர்வாகக் குழுக்களை தேர்வு செய்யும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உறுப்பினர் பட்டியலை முழுதுமாக சரி செய்த பின், தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அனைத்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
கடந்த ஆட்சியில், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருந்தவர்களின் எண்ணிக்கை 2.46 கோடி. ஆனால், தற்போது 1.59 கோடி பேர் உள்ளனர்.
அவர்களில், ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 98 லட்சம். மீதமுள்ள உறுப்பினர்களின் விபரங்களை சேகரிக்கும் பணி நடக்கிறது. இது முடிந்ததும், கூட்டுறவு தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், ஆதார், ரேஷன் கார்டு இணைப்பு பணி மந்த கதியில் நடக்கிறது.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கு ஓராண்டே உள்ளதால், தற்போது கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தினால், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு பதவிகள் வழங்குவதில் பிரச்னை ஏற்படலாம். இது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தலாம் என தி.மு.க., மேலிடம் கருதுகிறது.
எனவே, தற்போதைக்கு கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மேலும்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்