டில்லி உஷ்ஷ்ஷ்: மம்தாவின் மாற்றம்!

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வந்தவர், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி. ஆனால், சமீப காலமாக மோடிக்கு எதிராக அதிகம் பேசாமல் அடக்கி வாசிக்கிறார் மம்தா. இதற்கு காரணம், திரிணமுல் எம்.பி.,யும், மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி. இவரது ஆலோசனையின் அடிப்படையில் தான், மோடியை விமர்சிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார் மம்தா. 'மோடிக்கு எதிராக எதுவும் பேச வேண்டாம்' என, தன் கட்சியினருக்கும் கட்டளையிட்டுள்ளார்.

இதற்கு காரணம், ஊழல் மற்றும் பணப்பரிமாற்ற வழக்குகளில் அமலாக்கத் துறையும், சி.பி.ஐ.,யும் திரிணமுல் தலைவர்களை குறிவைத்து களம் இறங்கியுள்ளன. இந்நிலையில், 'மோடிக்கு எதிராக பேச வேண்டாம்' என, மம்தாவிடம் சொன்னாராம், அபிஷேக் பானர்ஜி.

ஆப்பரேஷன் சிந்துார் தொடர்பாக வெளிநாடு சென்ற அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவில், திரிணமுல் சார்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் எம்.பி., தேர்ந்தெடுக்கப்பட்டார்; இதற்கு மம்தா எதிர்ப்பு தெரிவிக்கவே, உடனே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மம்தாவிடம் பேசினார். பின், யூசுப் பதானுக்கு பதிலாக மம்தாவின் மருமகன் அபிஷேக், குழுவில் இடம் பெற்றார். ஆனால், ராகுலால், சசி தரூரை குழுவிலிருந்து மாற்ற முடியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, 'மம்தாவிடம் அரசியல் மாற்றம் துவங்கிவிட்டது' என்கிறது டில்லி அரசியல் வட்டாரம்.

Advertisement