பொது பைக்கில் பஸ் மோதி திருப்போரூர் தம்பதி பலி

மறைமலை நகர்,செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா சின்ன வெப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேதகிரி, 54; விவசாயி. இவரது மனைவி வடிவம்மாள், 52.

இருவரும், நேற்று முன்தினம் மாலை, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கிருந்து மீண்டும், 'பஜாஜ் பிளாட்டினா' பைக்கில் வீடு திரும்பினர்.

சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில், கொளத்துார் பகுதியில் மலைக்கோவில் பாதையில் வந்தனர். அப்போது, 'பாக்ஸ்கான்' தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பின்னால் வந்த தனியார் பேருந்து, தம்பதி சென்ற பைக்கில் மோதியது. இதில், இருவரும் படுகாயம் அடைந்தனர்.

பாலுார் போலீசார் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வடிவம்மாளும், காலை 7:00 மணியளவில் வேதகிரியும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து, பாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement