நாணயம் என்பது பணம் மட்டும் இல்லை... அது ஒரு வரலாறு!

பெங்களூரு: “நாணயம் என்பது பணம் மட்டும் இல்லை. அது ஒரு வரலாறு,” என, பெங்களூரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயகர் ஷெட்டி பேசினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரின் நிருபதுங்கா சாலையில் உள்ள தி மைதிக் சொசைட்டி, சென்னையில் உள்ள தென்னிந்திய நாணயவியல் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும், 33வது ஆண்டு தென்னிந்திய நாணயவியல் தேசிய மாநாடு, தி மைதிக் சொசைட்டி நுாற்றாண்டு மண்டபத்தில் நேற்று துவங்கியது.
பெங்களூரின் ஹிராபாய் பக்திப்பாடல் பாடினார். சிறப்பு விருந்தினராக பெங்களூரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ஜெயகர் ஷெட்டி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவருமான டாக்டர் டி.ராஜா ரெட்டி, மைதிக் சொசைட்டி ஆராய்ச்சி மற்றும் அகாடமி இயக்குநர் எஸ்.வி.படிகர்.
மைதிக் சொசைட்டி தலைவர் வி.நாகராஜ், கர்நாடக அரசின் தொல்லியல், அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய துறை முன்னாள் இயக்குநர் டாக்டர் ஆர்.கோபால், தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் செயலர் டாக்டர் டி.சத்யமூர்த்தி, தென்னிந்திய நாணய ஆராய்ச்சி ஆசிரியர் பி.வி.ராதாகிருஷ்ணன், மைதிக் சொசைட்டி நிர்வாக கமிட்டி உறுப்பினர் எம்.ஆர்.பிரசன்னகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர்.
புத்தகம் வெளியீடு
டாக்டர் ஆர்.கோபாலின் 'தென்னிந்திய நாணயங்கள் பற்றிய ஆய்வுகள்' புத்தகம் வெளியிடப்பட்டது. பழங்கால நாணயங்கள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன என்பது பற்றி அவர் விளக்கினார். தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் பொருளாளர் ஆர்.கலா பங்கேற்றார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜெயகர் ஷெட்டி பேசியதாவது:
நம் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நாணயம் முக்கிய பங்கு வகிக்கிறது. நம் நாட்டின் கலாசாரம், பண்பாடு, மன்னர்களின் சித்தாந்தம் ஆகியவை பற்றி பண்டைய கால நாணயங்கள் எடுத்துச் சொல்கின்றன. நாணயம் என்பது, பணம் மட்டும் இல்லை; அது ஒரு வரலாறு.
நாணயம் பற்றிய வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும். பழங்கால நாணயங்கள் பொக்கிஷம். அதை சேகரிப்பதில் ஆர்வம் வேண்டும். தி மைதிக் சொசைட்டியில் உள்ள நுாலகம் சிறப்பாக உள்ளது. வரலாறு பற்றி தெரிந்து கொள்ளும் புத்தகங்கள் இங்கு நிறைய உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த 1909ம் ஆண்டு துவங்கப்பட்ட தி மைதிக் சொசைட்டியின் சங்க செயல்பாடுகள் குறித்து, தென்னிந்திய நாணயவியல் கழக செயலர் டி.சத்யமூர்த்தி, தி மைதிக் சொசைட்டி தலைவர் நாகராஜ் பேசினர்.
வீட்டில் கவுரவிப்பு
புகழ்பெற்ற நாணயவியலரும், தென்னிந்திய நாணயவியல் கழக பொதுச்செயலருமான நரசிம்மமூர்த்தி, மாநாட்டில் கவுரவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. வீட்டிற்கே சென்று அவரை கவுரவிப்பதாக, தி மைதிக் சொசைட்டி அறிவித்தது.
மாநாட்டின் 'வி செல் அண்டு பை' அரங்கில், இரண்டாவது உலகப்போர் வெற்றி நாணயம்; வின்சென்ட் சர்ச்சில் நாணயம்; ஒலிம்பிக் நாணயம்; ஐரோப்பாவின் வெற்றியை குறிக்கும் நாணயம்; ஆஸ்திரேலியா ராணுவத்தின் 100வது ஆண்டு சேவையை குறிக்கும் நாணயம் உட்பட 600க்கும் மேற்பட்ட நாணயங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நாணயத்தின் விலை 700 முதல் 6,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
கேரளாவை சேர்ந்தவர்கள் வைத்திருந்த அரங்கில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள், பல நாடுகளின் நாணயங்கள் இருந்தன.
மாநாட்டிற்கு வந்தவர்கள் பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பார்த்து வியப்படைந்தனர். இம்மாநாடு இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

மேலும்
-
கழிவுநீர் கலப்பு அதிகரிப்பு; கர்நாடகாவில் இருந்து வரும் காவிரி நீரில் காரத்தன்மை அதிகம்!
-
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடு இந்தியா; நிடி ஆயோக் தலைவர் பெருமிதம்
-
அரசுக்காக வேலை செய்யவில்லை; வெளிநாட்டு பயணம் குறித்து சசி தரூர் வெளிப்படை!
-
சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!