நீலகிரி, குமரியில் வெளுத்து வாங்கிய மழை: மரங்கள் முறிவு; சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், அதை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா தலங்களில் உஷார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, விடிய விடிய சூறாவளி காற்றுடன் மழை பெய்தது; நேற்றும் தொடர்ந்தது. மழைக்கு மஞ்சூர், கூடலுார், பந்தலுார், கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்பு குழுவினர் மரங்களை அகற்றினர். பந்தலுாரில் கூவச்சோலை நிலச்சரிவு பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொன்னானி ஆற்றில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுமலை, மசினகுடி-, சிங்கார சாலையில் மூங்கில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி தலையாட்டு மருந்து நிவாரண முகாமை கலெக்டர் லட்சுமி பவ்யா, மாவட்ட பேரிடர் தடுப்பு கண்காணிப்பு அதிகாரி லலிதா ஆகியோர் பார்வையிட்டனர்.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''நீலகிரிக்கு 'ரெட் அலெர்ட்' இருப்பதால் மே 25, 26 தேதிகளில் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து, வனப்பகுதிக்குள் நடைபயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
''காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் மரத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தக்கூடாது,'' என்றார்.
அவலாஞ்சியில், 13 செ.மீ., மழை பதிவானதால் அங்குள்ள சூழல் சுற்றுலா, தொட்டபெட்டா, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். சாரல் மழையிலும் சிம்ஸ்பூங்கா பழ கண்காட்சிக்கு வந்த சுற்றுலா பயணியர் இதமான காலநிலையை ரசித்தனர்.
இடுக்கி
கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட், மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்வதால், படகு சவாரி உட்பட நீர்நிலை சுற்றுலாவுக்கு மாவட்ட நிர்வாகம், மே 27 வரை தடை விதித்துள்ளது.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே வாளரா பகுதியிலும், போடிமெட்டு, சின்னக்கானல் ரோட்டில் திடீர் நகர் பகுதியிலும் மரம் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது.
கன்னியாகுமரி
கேரளாவில் பருவமழை துவங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் தெரிகிறது. இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இரணியல் அருகே கண்டன்விளையில் காற்றின் வேகத்தில், 150 அடி உயர மொபைல் போன் கோபுரம் சரிந்து, ராஜமல்லி என்பவரது வீட்டின் மீது விழுந்தது.
வீடு கடுமையாக சேதமடைந்தது. நித்திரவிளை விரிவிளை மேற்கு கடற்கரை சாலையில் பெரிய வேப்பமரம் முறிந்து விழுந்ததில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திற்பரப்பு அருவி அமைந்துள்ள களியல் பகுதிகளில் ரோடுகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளான அருமநல்லுார், சிறமடம், ஞாலம் உள்ளிட்ட பகுதிகளில் 4,000க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. குலசேகரம் அருகே அண்டூர் சரக்கல்விளை பகுதியில், காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த ஹோட்டல் தொழிலாளி கிருஷ்ணன், 75, உயிரிழந்தார்.
ஆற்றுார் ஆனைக்குழி பகுதியில் செல்லையன் 92, என்பவரது வீட்டில் மரம் விழுந்ததில் கூரை சேதமடைந்து செல்லையன் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கும் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடைவிதித்து, பாம்பன் கடலோரத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க மீன்வளத் துறையினர் அறிவுறுத்தினர். முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது
- நமது நிருபர் குழு -.

மேலும்
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
-
மழையில் ஒழுகும் பளியன்குடி அங்கன்வாடி மைய கட்டடம்; காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு
-
போலீஸ் செய்திகள் தேனி