திருநீர்மலை ஏரி புனரமைக்கும் திட்டம் தேங்கியுள்ள நீர் முழுதும் வெளியேற்றம்

திருநீர்மலை :பல்லாவரம் சட்டசபை தொகுதியில் அடங்கியது, திருநீர்மலை பெரிய ஏரி. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இதன் பரப்பளவு, 194.01 ஏக்கர்.

தொடர் ஆக்கிரமிப்பால், 146.94 ஏக்கராக குறைந்து விட்டது. தாம்பரம், சானடோரியம் மெப்ஸ் வளாகம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், பல ஆண்டுகளாக இந்த ஏரியில் கலக்கிறது.

இதனால், இவ்வேரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீர் கெட்டுவிட்டது. கரையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து மூடிவிட்டன. குப்பை, கழிவு கொட்டும் இடமாக மாறிவிட்டது.

முழுதும் ஆகாய தாமரை வளர்ந்து மூடிவிட்டது. கண்ணெதிரே இவ்வேரி நாசமடைவதை தடுத்து நிறுத்தி, துார் வாரி ஆழப்படுத்த வேண்டும் என, ஏரி பாதுகாப்பு குழுவினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இதையடுத்து, 13 கோடி ரூபாய் செலவில், இவ்வேரியை சீரமைக்கும் பணி, கடந்த மாதம் துவங்கியது.

இத்திட்டத்தில், ஏரியில் உள்ள கழிவு நீரை வெளியேற்றி துார் வாரி ஆழப்படுத்துதல், சீமை கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்துதல், நடைபாதை, சிறுவர் பூங்கா, சுத்திகரிப்பு மையம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், இத்திட்டத்திற்காக, ஏரியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி, நேற்று துவங்கியது. இதற்காக, கலங்கலை உடைத்து நீரை வெளியேற்றி வருகின்றனர்.

ஓரிரு நாட்களில் தண்ணீர் வடிந்துவிடும். அதன்பின், துார் வாரி, ஆழப்படுத்தும் பணி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement