தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 30 வரை மழை

'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் 30ம் தேதி வரை, பலத்த காற்றுடன் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், நேற்று மதியம் நிலவரப்படி, பல இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, பந்தலுாரில் தலா, 11 செ.மீ., மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில், 9; நீலகிரி தேவாலாவில், 8; திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, நாகப்பட்டினத்தில், தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
மேலும், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வரும் 27ம் தேதியில் உருவாகக்கூடும். இதனால், இன்று முதல் 30ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் அதிகன மழை பெய்யும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், கன முதல் மிக கன மழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 92 சதவீதம் அதிக மழை
வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் அமுதா அளித்த பேட்டி:
கேரளாவில் நேற்று துவங்கிய தென்மேற்கு பருவ மழை, தமிழகத்தின் சில பகுதிகளிலும் பரவியுள்ளது. இந்த பருவமழை துவங்கும் காலகட்டத்தில், அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால், துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றுவது வழக்கம். அதன்படி, துாத்துக்குடி துறைமுகம் மற்றும் பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு இன்று, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புக் குழுக்கள், அந்தப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.
தென்மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில், நாளை சூறாவளிக்காற்று மணிக்கு, 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த மார்ச் முதல் தற்போது வரை, தமிழகத்தில் இயல்பை விட, 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு