தாய்க்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்த குழந்தை பலி

சூலுார்: கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே தாய்க்கு திடீரென வலிப்பு வந்ததால், அவரது கையில் இருந்த ஏழு மாத குழந்தை கீழே விழுந்து உயிரிழந்தது.


கோவை, ஆனைமலையை சேர்ந்த தம்பதி சுரேஷ்குமார் -- சுவாதி. சுரேஷ்குமார் சுல்தான்பேட்டை அடுத்த போகம்பட்டியில் தங்கி, பொக்லைன் இயந்திரம் ஓட்டி வருகிறார். இத்தம்பதிக்கு ஏழு மாதத்துக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.


நேற்று மதியம், குழந்தையை தன் கையில் வைத்திருந்த போது, சுவாதிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர் கையில் இருந்த குழந்தை கீழே விழுந்தது. அவரும் கீழே விழுந்துள்ளார். சிறிது நேரத்துக்கு பின், அவர் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார்.


குழந்தையை துாக்கிக்கொண்டு, பக்கத்து வீட்டுக்கு சென்ற போது, மீண்டும் வலிப்பு வந்து குழந்தையை தவற விட்டார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, தலையில் பலத்த காயத்துடன் குழந்தை கீழே கிடந்துள்ளது. உடனே குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.


சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement