மறந்து போன டிபாசிட் திரும்ப பெற எளிய விதிகள்

மும்பை:உரிமை கோரப்படாத டிபாசிட் தொகையை எளிதாக திரும்ப பெற, புதிய விதிகள் அடங்கிய வரைவை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நீண்டகாலமாக செயல்படாமல் உள்ள கணக்குகளை மீண்டும் செயல்படுத்த உதவும் வகையில், கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு எளிதான கே.ஒய்.சி., விதிமுறைகளை ஆர்.பி.ஐ., பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, கணக்கு வைத்துள்ள வங்கியில் மட்டுமின்றி, அந்த வங்கியின் எந்தவொரு கிளைகளிலும் வீடியோ அடிப்படையில் கே.ஒய்.சி.,யை புதுப்பிக்க முடியும்.

கிராமப்புறங்கள் மற்றும் தொலைதுார பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகளை வழங்க, வங்கியின் பிரதிநிதிகளை வங்கிகள் அனுமதிக்கலாம்.

இதன் காரணமாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் அவரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு, இந்த செயல்முறை எளிதாக இருக்கும்.

இதுவரை உரிமை கோரப்படாத டிபாசிட் தொகை 78,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. பயனாளிகள், யு.டி.ஜி.ஏ.எம்., எனப்படும் 'உட்கம்' தளத்தின் வாயிலாக சரிபார்த்து விரைவில் கே.ஒய்.சி.,யை புதுபிப்பதுடன், பணத்தை பெற வங்கி கிளையை நேரில் அணுகலாம்.

வரைவு அறிக்கை மீது ஜூன் மாதம் 6ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement