மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான தன்னார்வ அமைப்பு

சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், உரிமைகள் கிடைக்கிறதா என்பதை கவனித்தால், இல்லை என்றுதான் சொல்ல நேரிடும். மாற்றுத்திறனாளிகளுக்கு சமமான உரிமைகள், சலுகைகள் கிடைக்க வேண்டும் என, சட்டங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் உண்மையான பயனாளிகளுக்கு கிடைப்பது இல்லை.

அரசுகள் செய்ய வேண்டிய கடமைகளை, சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் செய்கின்றன. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுகின்றன. இவற்றில் 'ஷிரத்தாஞ்சலி இன்டிகிரேடட் ஸ்கூல்' அமைப்பும் ஒன்றாகும்.

குடிசைப்பகுதிகள்



பெங்களூரின் லிங்கராஜபுரத்தில் 'ஷிரத்தாஞ்சலி இன்டிகிரேடட் ஸ்கூல்' செயல்படுகிறது. குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு விளையாட்டு, கலை, கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகளை 50 ஆண்டுகளாக அளித்து வருகிறது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகிறது.

இந்த அமைப்பின் பள்ளியில், காது கேளாத, வாய் பேச முடியாத, பார்வையற்ற, மூளை வளர்ச்சி குறைந்த என பல விதமான குறைபாடுகள் உள்ள சிறார்களுக்கு கல்வி, விளையாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்தும் கற்பிக்கப்படுகிறது.

அதிக அக்கறை



இப்பள்ளியில் 313 மாணவர்களின் திறமை ஊக்குவிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களை, மற்ற மாணவர்களிடம் இருந்து விலக்கி வைப்பர். ஆனால் இந்த பள்ளியில், இத்தகைய சிறார்களின் மீது, அதிக அக்கறை காட்டப்படுகிறது.

இந்த காலத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், தேர்வு எழுத அனுமதிக்காமல் அறையில் அடைத்தோ, வெளியே நிற்க வைத்தோ, வீட்டுக்கு விரட்டியோ மாணவர்களை சித்ரவதை செய்த சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.

இத்தகைய சம்பவங்களுக்கு நடுவில் 'ஷிரத்தாஞ்சலி இன்டிகிரேடட் ஸ்கூல்' சேவை மனப்பான்மையுடன் செயல்படுவது பாராட்டத்தக்கது.

பிரின்ஸ்பால் பன்னகா பாபு கூறியதாவது:

குடிசைப்பகுதி மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு, சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி தரும் நோக்கில், இப்பள்ளி செயல்படுகிறது. இவர்களுக்கு இலவச மதிய உணவு, பாட புத்தகங்கள், மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து வசதி செய்து கொடுத்துள்ளோம்.

பள்ளிக்கு சிறார்களை அழைத்து வர, மீண்டும் வீட்டில் கொண்டு சேர்க்க பஸ்கள் வைத்துள்ளோம். இவற்றில் 10 முதல் 12 சக்கர நாற்காலிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ வேண்டும்.

சமுதாயத்துக்கு தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது, எங்கள் அமைப்பின் விருப்பமாகும். எனவே கல்வியுடன் கைவினை பொருட்கள் தயாரிப்பு பயிற்சியும் அளிக்கிறோம்.


இவ்வாறு அவர் கூறினார்

- நமது நிருபர் -.

Advertisement