விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்தில் காலாவதியான தீ அணைப்பான்

விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கிற்கு அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான தீ அணைப்பான் தற்போதும் தீயை அணைக்கும் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்தில் தீ, வெடி விபத்துக்களை தடுப்பது குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுடனான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழக தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் தலைமையில் நடந்தது. இக்கலந்துரையாடல் நடந்த கூட்டரங்கிற்கு அருகே சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த தீ அணைப்பானின் காலாவதி தேதி 2016 பிப். 9ல் முடிவடைந்தது.


ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள தீ அணைப்பான் குறித்து அதிகாரிகள் எந்த வித ஆய்வும் செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் ஆய்வுகள் செய்யும் அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் உள்ள தீ அணைப்பான்கள் காலாவதியாவதற்கு முன்பு முறையாக மாற்றப்படுகிறதா என ஆய்வுகள் செய்வதில்லை.

இதை வெளிப்படுத்தும் விதமாக எஸ்.பி., அலுவலகத்தில் காலாவதியான தீ அணைப்பான் தற்போதும் பயன்பாட்டில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கும் பணியில் காலாவதியான தீ அணைப்பானை போலீசார் பயன்படுத்த முடியாமல் பெரும் அசாம்பாவிதம் ஏற்படுவதற்கு அரசு அதிகாரிகளே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

எனவே அரசு அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ள தீ அணைப்பான்களில் காலாவதி தேதி முடிந்தும் பயன்பாட்டில் உள்ளவை குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement