விருதுநகர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தேவை ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில்; வெயிட்டிங் லிஸ்ட்டால் தவிக்கும் பயணிகள் எதிர்பார்ப்பு

மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி நாகர்கோவில் மாவட்டத்திற்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கு முத்துநகர் மற்றும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், தென்காசி மாவட்டத்திற்கு பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை மாவட்டத்திற்கு வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ், தேனி மாவட்டத்திற்கு போடிநாயக்கனூர் சூப்பர் பாஸ்ட், சிவகங்கைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ், ராமநாதபுரத்திற்கு சேது, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு சோழன் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


ஆனால், மாவட்ட தலைநகரங்களான விருதுநகர், திண்டுக்கல் நகரங்களில் இருந்து நேரடியாக சென்னைக்கு இயங்கும் வகையில் தனியாக ஒரு ரயில் கூட கிடையாது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பல்வேறு ரயில்களில் தான் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதில் மதுரையில் இருந்து தினமும் சென்னைக்கு செல்லும் 11 ரயில்களை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு உள்ளது. ஆனால், விருதுநகர் மாவட்ட மக்களுக்கு தினமும் இயங்கும் கொல்லம், பொதிகை எக்ஸ்பிரஸ் என 2 ரயில்கள் மட்டும்தான் உள்ளது.

தற்போது செங்கோட்டை -விருதுநகர் வழித்தடத்தில் தினமும் கொல்லம், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும், வாரத்தில் மூன்று நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், வாரத்தில் ஒரு நாள் இயங்கும் திருவனந்தபுரம் கொச்சி வேலி -தாம்பரம் ரயில்கள் மட்டும் தான் உள்ளது. இந்த 3 ரயில்களும் புறப்படும் நகரங்களிலேயே நிரம்பி விடுவதால் வழித்தடமான விருதுநகர் மாவட்ட நகரங்களைச் சேர்ந்த பயணிகளுக்கு எப்போதுமே வெயிட்டிங் லிஸ்ட் நிலை தான் காணப்படுகிறது. முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட பயணிக்க முடியாத நிலை உள்ளது.

ரயில்வே துறை தரவுகளின் படி ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை நகரங்களில் இருந்து தினமும் தலா 300-க்கும் மேற்பட்ட பயணிகள் கொல்லம், பொதிகை, சிலம்பு ஆகிய மூன்று ரயில்களில் பயணித்து வருகின்றனர். இதனை ஒட்டுமொத்த அளவில் கணக்கிட்டால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னைக்கு சென்று வருவது தெரிய வருகிறது.

மேலும் ஒவ்வொரு ரயிலிலும் சாதாரண நாட்களில் நூற்றுக்கு மேற்பட்ட வெயிட்டிங் லிஸ்ட் நிலையும், தொடர் விடுமுறை நாட்களில் டிக்கெட்டே முன்பதிவு செய்ய முடியாத நிலையும் காணப்படுகிறது.இதனால் விருதுநகர் மாவட்ட மக்களுக்கு சென்னை ரயில் பயணம் என்றாலே வெறுப்படையும் நிலை தான் காணப்படுகிறது. இதனால் ஏராளமானோர் கூடுதல் பணம் கொடுத்து டிராவல்ஸ் பஸ்களில் பயணிக்கின்றனர்.


இதனை தவிர்க்க தினமும் இரவு 7:00 மணிக்கு ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ரயில் நிலையங்களில் நின்று, மறுநாள் காலை 6:30 மணிக்கு சென்னை சென்றடையும் வகையில் ஆண்டாள் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் தினசரி ரயில் இயக்க வேண்டும். இதற்கு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க வேண்டுமென விருதுநகர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement