தென்மேற்கு பருவமழை துவங்கியதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - உயர்ந்து வரும் நீர்மட்டம்
கூடலுார்:தென்மேற்கு பருவமழை துவங்கியதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது முதல் போக சாகுபடிக்காக நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அணையில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்படும்.
தென்மேற்கு பருவமழையை நம்பியே முதல் போக நெல் சாகுபடி இருக்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மார்ச் 25ல் அணையின் நீர்மட்டம் 113 அடியாக இருந்தது. அதன்பின் அவ்வப்போது பெய்த கோடை மழையால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து நேற்று முன்தினம் காலையில் 114.45 அடியாக இருந்தது. இந்நிலையில் பருவமழையால் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைப் நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 36 மி.மீ., பெரியாறில் 44.4 மி.மீ., மழை பெய்தது. இதனால் அணைக்கு 100 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 487 கன அடியாக அதிகரித்தது.
நீர்மட்டம் சற்று உயர்ந்து 114.65 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 1668 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக மட்டும் வினாடிக்கு100 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
பருவ மழையால் நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து ஜூன் 1ல் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. இதனால் நீர்மட்டம் மேலும் உயரும் நிலை உள்ளதால் ஜூன் 1ல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
-
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
-
நீலகிரி, குமரியில் வெளுத்து வாங்கிய மழை: மரங்கள் முறிவு; சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு
-
நாணயம் என்பது பணம் மட்டும் இல்லை... அது ஒரு வரலாறு!
-
வர்த்தக ஆசையை துாண்டி மோசடி சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை
-
காயங்களுடன் இறந்து கிடந்த டிரைவர்