போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை துாசு தட்டுகிறது!.துறைரீதியான விசாரணைக்கு அரசு உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் 2018ல் நடந்த போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை, கர்நாடக அரசு இப்போது துாசு தட்டுகிறது. துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டு இருப்பதால், டி.ஜி.பி., பதவி எதிர்பார்க்கும் மூத்த ஐ.பி.எஸ்., அலோக் குமாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குமாரசாமிக்கு நெருக்கமானவர் என்பதால் அலோக் குமாரை, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு குறிவைப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் 2018 - 2019ம் ஆண்டில் காங்கிரஸ் - ம.ஜ.த., தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தார். அப்போது சி.சி.பி., கூடுதல் போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் குமார் பணியாற்றினார்.
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பதவிக்காக அலோக் குமார், இன்னொரு ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர் ராவ் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் மற்றும் சில அரசியல்வாதிகள், மடாதிபதிகளின் போன் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் அலோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்திற்கு மத்தியிலும் அலோக் குமாரை, பெங்களூரு போலீஸ் கமிஷனராக குமாரசாமி நியமித்தார். ஆனால் அவரால் ஒரு மாதம் மட்டுமே பணியில் இருக்க முடிந்தது.
போட்டி
கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், பாஸ்கர் ராவ் போலீஸ் கமிஷனர் ஆனார். போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணை நடத்திய சி.பி.ஐ., போன் ஒட்டுக் கேட்பில் அலோக் குமார் குற்றமற்றவர் என, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பாஸ்கர் ராவ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக டி.ஜி.பி.,யாக இருந்த அலோக் மோகன் பதவிக்காலம் கடந்த 21ம் தேதி முடிந்தது. புதிய டி.ஜி.பி., பதவிக்கு மூத்த அதிகாரிகள் சலீம், பிரசாந்த் குமார் தாக்கூர் இடையே போட்டி ஏற்பட்டது.
இந்த பட்டியலில் அலோக் குமாரும் இணைந்துள்ளார். டி.ஜி.பி., பதவியை பெற மும்முரமாக முயற்சி செய்கிறார். மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு நெருக்கமானவர் என்பதால், அவர் மூலம் எப்படியாவது டி.ஜி.பி., பதவியை பதவியை பிடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அரசு நோக்கம்
ஆனால் அலோக் குமாருக்கு டி.ஜி.பி., பதவியை கொடுக்க, ஆளுங்கட்சியினருக்கு பிடிக்கவில்லை. அவருக்கு 'செக்' வைக்கும் நோக்கில், மொபைல் போன் ஒட்டுக்கேட்பு வழக்கை காங்கிரஸ் அரசு மீண்டும் துாசி தட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அலோக் குமார் மீது துறைரீதியான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையை துரிதமாக நடத்தாமல் இழுத்தடித்து, பதவிக்காலம் முடியும் வரை டி.ஜி.பி., பதவி அவருக்கு கிடைக்கவிடாமல் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியினரின் நோக்கம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவருக்கு டி.ஜி.பி., பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தலைமைச் செயலர் ஷாலினிக்கு, அலோக் குமார் எழுதிய கடிதத்தில், 'நான் போன் ஒட்டுக்கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. ஒட்டுக்கேட்பு வழக்கில் நான் குற்றமற்றவன் என்று சி.பி.ஐ., நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கூறி உள்ளார்.
மேலும்
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் முன்விரோதத்தால் சுட்டுக்கொலை
-
கிறிஸ்துவ வன்னியருக்கு எம்.பி.சி., எதிர்த்த ஹிந்து அமைப்பினர் கைது
-
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 30 வரை மழை
-
தாய்க்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்த குழந்தை பலி
-
'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்