தமிழகத்தை பார்த்து எல்லை பாதுகாப்பு படைக்கு 'மகிழ்ச்சி' திட்டம் உருவாக்க மத்திய அரசு முயற்சி: தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பெருமிதம்

கோவை:''போலீசாரின் மன அழுத்தத்தை போக்க உதவும், தமிழக காவல்துறையின் 'மகிழ்ச்சி' திட்டத்தை பார்த்து, மத்திய அரசும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இத்திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது,'' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பெருமையாக தெரிவித்தார்.
போலீசாருக்கு பணிச்சுமை, குடும்ப சூழல், குடி, போதைப்பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கி, மகிழ்ச்சியாக வாழ, தமிழக காவல்துறை, மதுரை எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளையுடன் இணைந்து, 'மகிழ்ச்சி' என்ற திட்டத்தை துவக்கியது. சென்னையில் இத்திட்டம் துவக்கியபோது, ஏராளமான போலீசார் மற்றும் குடும்பத்தினர் பயனடைந்தனர். தொடர்ந்து, மதுரை, திருவாரூரில் செயல்படுத்தப்பட்டது.
தற்போது கோவை, திருப்பூர், சேலம் மாநகர போலீசார் மற்றும் மேற்கு மண்டல போலீசார் பயன்பெறும் வகையில், கோவையில் துவக்கப்பட்டுள்ளது. மன நல ஆலோசனை கையேடு வழங்கப்பட்டு, மொபைல் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.
திட்டத்தை துவக்கி வைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசுகையில், ''உடல்நிலையில் ஏற்படும் பிரச்னைகள்போல், மனதிலும் பிரச்னை ஏற்படும்; வெளியே சொல்ல பலர் தயங்குகினறனர். எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் மன அழுத்தம் வருகிறது. மன அழுத்தம் குடும்பத்தையும் பாதிக்கும். மன பிரச்னைகளுக்கு தீர்வு காணவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. அடுத்த கட்டமாக வேலுாரிலும் செயல்படுத்த உள்ளோம். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் வெற்றியை பார்த்து, மத்திய அரசும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு இத்திட்டத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது,'' என்றார்.
எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், ''போலீஸ் பணியில் மன அழுத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போலீசாரிடம் எடுத்த கணக்கெடுப்பில், 64 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருக்கிறது. 4 சதவீதத்தினர் தற்கொலை எண்ணத்துக்கு செல்கின்றனர். இத்திட்டம் மூலம் மன அழுத்தம் போக்கி, மகிழ்ச்சியாக வாழ வழி உருவாக்குகிறோம்,'' என்றார்.
மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் பேசுகையில், ''மன அழுத்தத்தை நாமே சரி செய்து கொள்ள வேண்டும். தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டால், கையாள கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தம், கஷ்டம் இல்லாத மனிதர் உலகத்திலேயே இல்லை. வேலையை இஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், டி.ஜி.பி., தலைமையிடம் வினித் வான்கடே, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார், ஐ.ஜி., சத்ய பிரியா (போலீஸ் நலத்துறை), கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், மனநல மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், மோனி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, 'மகிழ்ச்சி' திட்ட மையத்தை, டி.ஜி.பி., திறந்து வைத்தார்.
மேலும்
-
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 30 வரை மழை
-
தாய்க்கு வலிப்பு வந்ததால் கீழே விழுந்த குழந்தை பலி
-
'நிடி ஆயோக்' கூட்டத்தில் ஏழே நிமிடங்கள் மட்டும் தமிழில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
-
கனமழைக்கு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை! பாதுகாப்பு, மீட்பு ஏற்பாடுகள் தயார்; கலெக்டர் தகவல்
-
நரிக்குடியில் படுவேகமாக நடக்குது செம்மண் திருட்டு
-
நீலகிரி, குமரியில் வெளுத்து வாங்கிய மழை: மரங்கள் முறிவு; சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு