சொத்து வரி உயர்வுக்கு யார் காரணம்?

கிராமங்களில் குடிசைகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், 'சொத்து வரி உயர்வுக்கு காரணமானவரே பழனிசாமிதான். இருந்தாலும், அதை மறைத்து ஒப்பாரி வைத்து நாடகம் போடுகிறார்' என, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

-- நமது நிருபர் -

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

கடந்த 2021 மே மாதம் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், சொத்து வரி, குடிநீர் கட்டணம், கழிவுநீர் அகற்றல் கட்டணம், மின் கட்டணம் ஆண்டுதோறும், ஆறு சதவீதம் உயர்த்தப்படுகிறது. உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் நடமாட்டம், மணல் கொள்ளை, டாஸ்மாக் கொள்ளை என்று, அனைத்து துறைகளிலும் அதிகரித்து வரும் ஊழலால், நாட்டிலேயே கடன் வாங்குவதில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

இதுவரை, குடிசை ஒன்றுக்கு 44 ரூபாய்; ஓடு, 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' வீடு ஒன்றுக்கு 66 ரூபாய்; கான்கிரீட் வீடு ஒன்றுக்கு 121 ரூபாய் வீட்டு வரியாக செலுத்தி வந்தனர்.

தற்போது, உயர்த்தப்பட்ட சொத்து வரியின்படி சதுர அடிக்கு, குடிசைகளுக்கு 40 காசு முதல் 1 ரூபாய்; ஓட்டு வீட்டிற்கு 30 முதல் 60 காசு; கான்கிரீட் வீட்டிற்கு 50 காசு முதல் 1 ரூபாய் வரையும் வீட்டு வரி உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள பழைய வீடுகளுக்கும், புதிய வரி வசூலிக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தி.மு.க., அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஊராட்சிகளில் இனி அதிகபட்சமாக, 500 சதுர அடி கான்கிரீட் வீடுகளுக்கு 500 ரூபாய்; ஓட்டு வீடுகளுக்கு 300 ரூபாய்; குடிசை வீடுகளுக்கு 200 ரூபாயும் வீட்டு வரி வசூலிக்கப்படும்.

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார். ஆனால், தி.மு.க., அரசோ, ஏழை மக்களின் குடிசைகளுக்கும் வரியை உயர்த்தி அவர்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. இதுதான், தி.மு.க., ஆட்சியின் சாதனை.

கடந்த ஆண்டு முதல், அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள புதிய வரிவிதிப்பு, 'ஆன்லைன்' சேவையை, தி.மு.க., அரசு முடக்கி வைத்துள்ளதால், புதிதாக வீடு கட்டிய மக்கள், வரி நிர்ணயத்திற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். கிராமங்களில் வரைபட அனுமதிக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டதும், இதற்கு ஒரு காரணம் என்று, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, மக்களின் வயிற்றில் அடித்து, அலங்கோல கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் தி.மு.க., அரசு, பஞ்சாயத்துப் பகுதிகளுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு:

'குடிசைகள், ஓட்டு வீடுகளுக்குக்கூட பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது' என, வழக்கம் போலவே, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பச்சைப்பொய் சொல்லியிருக்கிறார். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மத்திய பா.ஜ., அரசு கை நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்திட்டதால் தான், இப்போது மத்திய அரசின் பிடிகளில் சிக்கித் தவிக்கிறோம்.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையம், 'மொத்த மாநில உற்பத்தி வளர்ச்சிக்கு நிகராக, நகர்ப்புற சொத்துக்களின் வரிகளை உயர்த்த வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை பெற வேண்டுமெனில், சொத்து வரியை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து, சொத்து வரி வசூலில் வளர்ச்சியை காட்ட வேண்டும்' என, கூறியுள்ளது.

அதன்படி, தமிழக அரசு செய்யாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021 - -26 வரை, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் மானியம், 4 லட்சத்து, 36,361 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்படும்.

அதோடு துாய்மை இந்தியா திட்டம், 'அம்ரூட் 2.0' திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மோடி அரசு இப்படி கடுமையான விதிகளை, 15வது நிதியாணையம் வாயிலாக விதித்தபோது, அதற்கு கட்டுப்பட்டு கையெழுத்திட்டவர்தான் பழனிசாமி.

அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்வு என்பது நடைமுறைக்கு வந்தது.

வேறு வழியின்றி சொத்து வரியை உயர்த்தும் நிலை ஏற்பட்டாலும், ஏழைகள் பாதிக்காத வகையில், குறைந்த அளவு சொத்து வரி விதிக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, குடியிருப்புகளின் பரப்பளவை நான்கு வகைகளாகப் பிரித்து, வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் சொத்து வரி குறைவுதான்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 30 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதனால், சில நுாறு ரூபாய் மட்டும் வரியாக கட்டி வந்த மக்கள், ஆயிரங்களில் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

சொத்து வரி உயர்வுக்கு, தானே காரணம் என்பதை பழனிசாமி மறைத்து விட்டு, தி.மு.க., அரசு மீது களங்கம் கற்பிக்க, அவதுாறுகளை அள்ளி வீசுகிறார். 'அம்பி, ரெமோ' என, இரட்டை வேடம் போடும் பழனிசாமியை, அந்நியன் படத்தில் வரும் வசனம் போல, 'பிண்றியே...' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement