டில்லியில் கனமழை; விமான சேவை முடங்கியது!

2


புதுடில்லி: டில்லியில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விமான சேவை பல மணி நேரம் முடங்கியது.


டில்லியில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கடுமையான வானிலை காரணமாக சில விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கனமழை காரணமாக மின்டோ சாலை, ஹுமாயூன் சாலை மற்றும் சாஸ்திரி பவன் உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின.


பொதுவாக பலத்த மழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கி நிற்கும் மின்டோ பாலத்தில் ஒரு கார் நீரில் மூழ்கியது. டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் புழுதிப் புயலைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், அதோடு மணிக்கு 60 முதல் 100 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்திருந்தது.



ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.


இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு, பயண நேரத்தை விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டறிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement