சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சரி செய்வாரா முதல்வர்: பா.ஜ.,

சென்னை: 'காவல் துறை அத்துமீறலை கண்டுகொள்ளாமல், தமிழக சட்டம் - ஒழுங்கை சீரழிய விடும் முதல்வர் ஸ்டாலின், ஆட்சியின் இறுதி ஆண்டிலாவது தன் பொறுப்புணர்ந்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வழுக்கும் கழிப்பறைகள்



அவரது அறிக்கை:



இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்கும் போர்வையில், காவல் துறையின் மிருகத்தனமான அத்துமீறல்களும், 'லாக் அப்' மரணங்களும் தான் தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2024 ஜனவரி முதல் அக்., வரை சென்னை புழல் சிறையில், 304 கைதிகளுக்கு எலும்பு காயங்கள் ஏற்பட்டதற்கு, வழுக்கும் கழிப்பறைகளே காரணம் என தி.மு.க., அரசால் சாக்கு சொல்லப்பட்டது.

கடந்த 2022ல், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், ஐந்து குற்றவாளிகளின் பற்களை உடைத்து அத்துமீறலில் ஈடுபட்டபோது, தி.மு.க., அரசு கண்மூடி வாய் பொத்தி இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, 109 லாக் அப் மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மேலும், போலீசாரின் வன்முறையால் காவல் நிலையத்தில் வைத்தே, 2022ல் சென்னையில் 25 வயது இளைஞர்; திருவண்ணாமலையில் 47 வயது நபர்; 2023ல் தென்காசியில் 23 வயது தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜாதி வன்முறை



இவ்வாறு, காவல் துறையின் அத்துமீறல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மறுபுறம், போதை பொருள் துஷ்பிரயோகம், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் ஜாதி வன்முறை என, குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இப்படி எல்லாம் சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்க காரணம், காவல் துறையை தி.மு.க., தன் சொந்த ஏவல் வேலைகளுக்கு பயன்படுத்துவது தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

முதல்வர் ஸ்டாலின் இனியாவது காவல் துறை மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறல்களை அடக்கி, சட்டம் - ஒழுங்கை சீர்செய்வாரா என்பதே, மக்களிடம் எஞ்சியிருக்கும் கடைசி எதிர்பார்ப்பு.

எனவே, மேடைதோறும், 'அமைதிப்பூங்கா தமிழகம்' என முழங்குவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தி.மு.க., அரசு, முதலில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement