மழையில் ஒழுகும் பளியன்குடி அங்கன்வாடி மைய கட்டடம்; காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு

கூடலுார் : லோயர்கேம்ப் பளியன்குடியில் மழையில் ஒழுகும் அங்கன்வாடி மையக் கட்டடத்தை சீரமைக்க கலெக்டர் உத்தரவிட்டும் இதுவரை பணிகள் துவங்கவில்லை.

கூடலுார் அருகே லோயர்கேம்ப் பளியன்குடியில் 53 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு மே 14 ல் கலெக்டர் ரஞ்சீத்சிங் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. பல ஆண்டுகளாக சேதமடைந்த குடியிருப்புகளில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக விரைவில் புதியதாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என முகாமில் அறிவிக்கப்பட்டது.

மேலும் மழையில் ஒழுகும் அங்கன்வாடி மைய கட்டடத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

நேரில் பார்வையிட்ட கலெக்டர், 'அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைவு இருப்பின் அதனை சரி செய்வதற்காக சத்துணவு சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட வேண்டும், மேலும் குழந்தைகளை தொடர்ச்சியாக அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்ப வேண்டும், சேதமடைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென உத்தரவிட்டார்.

ஒரு வாரத்திற்கு மேலாகியும் இதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை மேலும் தென்மேற்கு பருவமழை இன்று துவங்க உள்ள நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement