மக்களாட்சிக்கு வழிவிடுங்க; வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸூக்கு அழுத்தம்

டாக்கா: மக்களால் தேர்வு செய்யப்படும் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்குமாறு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸூக்கு அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
நாடு முழுதும் வெடித்த வன்முறையை அடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறினார். அரசு கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அப்போது, அடுத்த ஆறு மாதத்திற்குள் பொது தேர்தல் நடத்தி, புதிய அரசை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானை ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இது, இரு தரப்பினருக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலை அறிவிக்கும்படி, யூனுசுக்கு ராணுவ தளபதி ஜமான் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதனால், தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் யூனுஸூக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் தேர்தலை தள்ளிவைப்பதில் முனைப்பு காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில், டாக்காவில் இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் முகமது யூனுஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, சிலர், இடைக்கால அரசு தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நீண்டகால கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, ஷேக் ஹசினா ஆட்சியின் போது, வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த வங்கதேச தேசியவாத கட்சி, இடைக்கால அரசு தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஆனால், தேர்தலையே நடத்தாமல், இடைக்கால அரசின் ஆட்சியை தொடர யூனுஸ் விரும்புவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

