இந்தியாவுக்கு இரண்டு பதக்கம்: ஜூனியர் 'உலக' துப்பாக்கி சுடுதலில்

சுஹ்ல்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் ரைபிள்' (கலப்பு) பிரிவில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கம் கிடைத்தது.
ஜெர்மனியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) நடக்கிறது. இதன் 10 மீ., 'ஏர் ரைபிள்' கலப்பு அணிகள் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நரேன் பிரனவ், கியாதி சவுத்ரி ஜோடி 631.0 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. மற்றொரு இந்திய ஜோடியான ஷாம்பவி ஷ்ராவன், ஹிமான்ஷு ஜோடி 314.0 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
அடுத்து நடந்த பைனலில் நரேன்-கியாதி ஜோடி 14-16 என சீனாவின் யுடிங், லிவான்லின் ஹுவாங் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. பின் 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் ஷாம்பவி, ஹிமான்ஷு ஜோடி 17-9 என அமெரிக்காவின் ஸ்பென்சர், கிரிப்பின் லேக் ஜோடியை வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றியது.
இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கம் கைப்பற்றி இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (3 தங்கம், ஒரு வெண்கலம்) நீடிக்கிறது.