'டவுட்' தனபாலு

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: அரக்கோணம் பகுதி யில் கல்லுாரி மாணவி ஒருவரை, தி.மு.க., பிரமுகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. அதை, தமிழக அரசு தடுக்கத் தவறி விட்டது. அரக்கோணம் பாலியல் புகார் சம்பவத்தில், தி.மு.க., நிர்வாகியை கட்சி பதவியில் இருந்து நீக்கியது மட்டும் போதாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
டவுட் தனபாலு: கொஞ்ச நாளா, தி.மு.க.,வை விமர்சிக்காம அடக்கி வாசித்தீங்களே... அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் உங்களுக்கும் இடம் உண்டு என்ற தகவல் உறுதியாகிட்டதால, ஆளுங்கட்சி எதிர்ப்பு என்ற அஸ்திரத்தை மறுபடியும் கையில் எடுத்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: நான், கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்தபோது, எல்லா மதங்களையும் விமர்சித்திருக்கிறேன். இயேசு பற்றியும், ராமர் பற்றியும் பேசியிருக்கிறேன். பல்வேறு மேடைகளில், 12 ஆண்டுகளாக கிறிஸ்துவ வழிபாடு, இயேசு பற்றி பேசிய பேச்சுகளை முழுமையாக வெளியிடாமல், சில பகுதிகளை வெட்டி, ஒட்டி, திராவிட இயக்க ஆதரவாளர்கள் தவறான தகவல் பரப்புகின்றனர்; அரசியலில் என் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கின்றனர்.
டவுட் தனபாலு: நீங்க என்னைக்காவது, கொண்ட கொள்கையில் உறுதியா இருந்திருக்கீங்களா... உதாரணமா, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை ஆரம்பத்துல வரவேற்ற நீங்க, அப்புறம் அவரது கட்சியை தாறுமாறா திட்ட ஆரம்பிச்சுட்டீங்க... அரசியலில், நேரத்துக்கு ஒரு நிலைப்பாடு எடுத்துட்டு, மற்ற கட்சிகளை குறை கூறி பலன் இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!
கலசப்பாக்கம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., சரவணன்: ஒரு ஏழை விவசாயி, தன் நிலத்திற்கு ஒரு லாரி மண் கேட்டு, மனு அளித்தால், அவர்களுக்கு அனுமதி தருவது இல்லை. ஆனால், சட்ட விரோதமாக ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு, 500 முதல் 1,000 லாரி லோடு வரை, ஏரியிலிருந்து மண் எடுத்துச் செல்ல, விதிகளை மீறி அனுமதி வழங்கப்படுகிறது. வருவாய் துறையினர், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, இதற்கு அனுமதிக்கின்றனர்.
-டவுட் தனபாலு: நாளைக்கு ஓட்டு கேட்டு, கிராம மக்களை சந்திக்கப் போறது நீங்க தானே... அதிகாரிகளா போகப் போறாங்க... தி.மு.க., ஆட்சி எப்படி நடக்குது என்பதற்கு, உங்களது வாக்குமூலமே, உள்ளங்கை நெல்லிக்கனி என்பதில், 'டவுட்'டே இல்லை!