ரஷ்யா 'ட்ரோன்' தாக்குதல்: உக்ரைனில் 12 பேர் பலி

கீவ்: உக்ரைனில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் மற்றும் ஏவுகணை வாயிலாக ரஷ்யா நடத்திய தாக்குதலில், 12 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மூன்று ஆண்டுகளாக மோதல் நடக்கிறது. இதில் இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோதலை நிறுத்தும்படி இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. சண்டையை நிறுத்துவது தொடர்பாக, உக்ரைன் - ரஷ்யா இடையே ஒருபக்கம் பேச்சு நடந்தாலும், மறுபக்கம் தாக்குதலும் தொடர்கிறது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை குறிவைத்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நேற்று முன்தினம் இரவும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலுக்கு, 298 ட்ரோன்கள் மற்றும் 69 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில், தலைநகர் கீவ் நகரில் நான்கு பேரும்; சைட்டோமிர் நகரில் மூன்று சிறுவர்களும்; மைக்கோலைவ் நகரில் ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும், க்மெல்னிட்ஸ்கி நகரில் நடந்த தாக்குதலில், நான்கு பேர் உயிரிழந்தனர்; 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது தவிர, இந்த நகரங்களில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புகளும் பலத்த சேதமடைந்தன. போர் துவங்கியதில் இருந்து, உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, ஏற்கனவே நடத்திய பேச்சின்படி, ரஷ்யாவும், உக்ரைனும் தங்கள் வசம் இருந்த கைதிகளை பரஸ்பரம் விடுவித்து வருகின்றன.

Advertisement