கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு சராசரி மழைதான் பெய்யும்: வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்

கோவை : மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், 250 மி.மீ., வரை மழை இருக்கும் என, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், இன்றும் கனமழை முதல், அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, தமிழக பேரிடர் மேலாண்மைக் குழு அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் அதிக கனமழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மிக, மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் 6.5 செ.மீ., முதல், 11.55 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, வால்பாறை, நீலகிரி, கோவையின் தொண்டாமுத்துார் ஆகிய பகுதிகளில், 250 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில், 100 - 150 மி.மீ., வரை மழை பெய்யலாம் எனவும் மையம் தெரிவித்துள்ளது.
வேளாண் பல்கலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி கூறுகையில்,''மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலேயே கனமழை, மிக அதிக கனமழை இருக்கும். கோவையின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பின் படிப்படியாக மழை குறையும். தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால் தான் கனமழை, மிக அதிக கனமழை இருக்கலாம். அதன் பின் மழை குறையும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில், சராசரியை ஒட்டி கீழே தான் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவையனைத்தும் கணிப்புகள் தான். மாற்றத்துக்கு உரியது,'' என்றார்.