விவசாய நிலத்தில் விழுந்த மின்கம்பம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பாரதிபுரம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இப்பகுதி விவசாயிகள் ஏரி தண்ணீர் மற்றும் ஆழ்துளை கிணற்றிலிருந்து மின் மோட்டார் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீரை கொண்டு, விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர்.
இதற்காக, விளை நிலங்களில் மின் வாரியம் சார்பில், ஆங்காங்கே மின் கம்பங்கள் பொருத்தப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
அப்போது, மேனலூர் செல்லும் சாலையோர விளை நிலங்களில் நடப்பட்டிருந்த, மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால், அப்பகுதியில் உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உயிர்சேதம் தடுக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள பம்ப் செட்டுகளை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, முறிந்து விழுந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பத்தை அமைத்து, மின் இணைப்பு வழங்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.