சிறுபாலத்தையொட்டி பள்ளம் மண் அணைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மேனலுார் ஊராட்சியில், காட்டுப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே குறுக்கு தெரு உள்ளது. இந்த குறுக்கு தெரு, வேடபாளையம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் இடத்தில் கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் மீது சிறுபாலம் அமைக்கப்படாமல் இருந்ததால், மழை நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதையடுத்து, குறுக்கு தெருவில் உள்ள கால்வாய் மீது பாலம் அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், ஒன்றிய பொது நிதியின் கீழ், 6.50 லட்சம் ரூபாய் செலவில், புதிய சிறுபாலம் இரண்டு மாதத்திற்கு முன் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட சிறுபாலத்தையொட்டி மண் அணைக்கப்பட்டு இருந்தது. நான்கு நாட்களுக்கு முன் பெய்த மழையின்போது, சிறுபாலத்தையொட்டி அணைக்கப்பட்டிருந்த மண் அரித்து சென்றுள்ளது.

இதனால், சிறுபாலத்தின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாலத்தின் மீது மோதி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, சிறுபாலத்தையொட்டி மண் கொட்டி அணைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement