தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள் சூணாம்பேடில் விபத்து அபாயம்

சூணாம்பேடு:சூணாம்பேடு கிராமம், பாப்பான்குளம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

இதில், சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் வழியாக, மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, இப்பகுதியில் உள்ள விவசாய மோட்டார்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த மின்கம்பிகள் பல இடங்களில், நடந்து செல்வோரின் தலையில் முட்டும் அளவிற்கு தாழ்ந்து செல்வதால், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், அந்த வழியாக நடந்து செல்லவே, விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

வயல்வெளி பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள், தாழ்ந்து செல்லும் இந்த மின்கம்பிகளால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

இதேபோல, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பிகள் தாழ்ந்து செல்வதால், விவசாயப் பணி மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு முறையும் மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்து, அதன் பின் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மற்ற விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து, மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, மின்வாரியத் துறை அதிகாரிகள், விவசாய நிலத்தில் விபத்து ஏற்படும் நிலையில் தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை, உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement