திறக்கப்படாத நரிக்குடி நாலுார் துணை சுகாதார நிலைய கட்டடம்

நரிக்குடி: நரிக்குடி நாலுாரில் புதிதாக கட்டியும் துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பழைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அச்சத்தில் உள்ளனர்.
நரிக்குடி நாலுாரில் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சுற்றுகிராமங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டடத்தை அவ்வப்போது பராமரிப்பு செய்து வந்தனர். தற்போது கட்டடத்தின் உறுதித் தன்மை இழந்து, கூரை இடிந்து வருகிறது. இதையடுத்து ஓராண்டுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு தயாராக இருந்தும், இன்னும் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
செவிலியர் குடும்பத்தினருடன் பழைய கட்டடத்தில் தங்கி வருவதால் எப்போது இடியுமோ என்கிற அச்சம் உள்ளது. புதிய கட்டடம் கட்டியும் ஆபத்தான பழைய கட்டடத்திற்கு நோயாளிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் புதிய கட்டடமும் பாழடைந்து வருகிறது. எனவே கிடப்பில் போடப்பட்ட துணை சுகாதார நிலைய புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.