பெண்ணிடம் ரூ.5.90 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் மொபைல் போனுக்கு, டெலிகிராம் செயலி வாயிலாக, பகுதி நேர வேலை வாய்ப்பு என, குறுந்தகவல் வந்தது. அதில், குறிப்பிடப்பட்டிருந்த எண்ணிற்கு, அப்பெண் தொடர்பு கொண்டு பேசினார்.

எதிர்முனையில் பேசியவர், ஆன்லைன் டிரேடிங் வாயிலாக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறி, லிங்க் அனுப்பியுள்ளார்.

நம்பிய அப்பெண், லிங்க் வாயிலாக, 5 லட்சத்து 90,830 ரூபாய் முதலீடு செய்தார். சில நாட்களில் லாபம் ஏதும் வராததால், அந்த பெண் மர்ம நபரை தொடர்பு கொண்டுள்ளார்.

கூடுதலாக பணத்தை கட்டினால் தான் முதலீடு பணத்தை எடுக்க முடியும் என, வற்புறுத்தியுள்ளார். மோசடி செய்யப்பட்டதை அறிந்த பெண், துாத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடியில் ஈடுபட்ட, கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பை சேர்ந்த மகேஷ், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement