ஜானகி நகரில் சாக்கடை அடைப்பால் வீட்டு வளாகத்தில் மழை நீர் தேக்கம்

விபத்து அபாயம்



ராமகிருஷ்ணா மில் முதல் விளாங்குறிச்சி செல்லும் சாலையில், மக்கள் ஸ்டோர் அருகில், சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சமீபத்தில் சீரமைக்கப்பட்ட இச்சாலை, வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகும் வகையில், மோசமான நிலையில் உள்ளது.

- செந்தில்குமார், விளாங்குறிச்சி

மூடப்படாத கால்வாய்



கோவை சாய்பாபா கோவில் பஸ் ஸ்டாப் அருகில், சாக்கடை கால்வாய் மூடாமல் உள்ளது. இது பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--அருள் முருகன்,சாய்பாபா காலனி

துார்வாராத சாக்கடை



சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள சாக்கடை, துார்வாராமல் விடப்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையில், சாக்கடை அடைத்து சகதியும் குப்பையும் நிறைந்து, இப்பகுதி முழுவதும் சாக்கடை நீர் மழை நீருடன் தேங்கியது. மழைக்காலம் துவங்கியுள்ளதால், உடனடியாக சாக்கடை வசதியை மேம்படுத்தி, சரிசெய்து தரவேண்டும்.

- அழகேசன், சிங்காநல்லுார்.

வீடுகளுக்குள் மழைநீர்



சாக்கடை அடைப்பு காரணமாக, வேலாண்டிபாளையம் சாஸ்திரி ரோடு, ஜானகி நகரில் வீடு வளாகங்களுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது. மழை அதிகமானால், வீடுகளுக்குள் மழை நீர் செல்லும் என்பதால், சாக்கடை அடைப்பை சரிசெய்து, மழை நீர் செல்ல உரிய வழிவகை செய்யவேண்டும்.

- ஜோசப்குருவில்லா, வேலாண்டிபாளையம்.

விபத்து அபாயம்



மணியகாரம்பாளையம் முதல் ராக்காசி கார்டன் செல்லும் சாலையில், மரங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. வாகனங்கள் அச்சத்துடன் அப்பகுதியை கடக்கும் சூழல் உள்ளது. மழை காலம் என்பதால், மரங்கள் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாரதி, மணியகாரம்பாளையம்.

விளம்பர பலகையால் அச்சம்



பீளமேடு ஆர்.டி.ஓ., அருகில் உள்ள கட்டடத்தில் விளம்பர பலகை, மிக உயரத்தில் அச்சப்படும்படி அமைக்கப்படுகிறது. இதனால், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கல்யாணி, பீளமேடு

பராமரிப்பு சரியில்லை



உக்கடம் பெரியகுளத்தில் பராமரிப்பு சரியாக இல்லை. அதன் ஒரு பகுதி யாரும் கண்டுகொள்ளாமல், புதர்மண்டியுள்ளது. நடைபாதைகளும் புதர்மண்டி இருப்பதால், பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லவே அச்சமாக உள்ளது.

- பாலன், போத்தனுார்.

வீணாகும் குடிநீர்



செட்டிபாளையம் சாலை, ஜி.டி., டேங்க் விநாயகர் கோவில் அருகில் பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சரிசெய்ய வேண்டும்.

- கண்ணன், செட்டிபாளையம்.

வேகத்தடை தேவை



செட்டிபாளையம் சாலை, ஜி.டி. டேங்க் பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால், சாலையை கடக்கவே மக்கள் அச்சப்படும் சூழல் உள்ளது. உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும்.

- பாலகிருஷ்ணன், செட்டிபாளையம்.

பலவீனமான பாலம்



பீளமேடு மற்றும் காந்திபுரம் பகுதிக்கு இணைப்பாக, ஆவாரம்பாளையம் சாலை உள்ளது. இதில், அமைந்துள்ள இரண்டு தரைமட்ட பாலமும், மேடு பள்ளமாக பலவீனமான நிலையில் உள்ளது. மழை நேரத்தில் மேடு, பள்ளம் தெரியாமல் வாகனங்கள் அவதிப்படும் சூழல் உள்ளது.

- சுதா, ஆவாரம்பாளையம்.

Advertisement