ரூ.500 நோட்டுகளுக்காக மீண்டும் பண மதிப்பிழப்பு தேவை: மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

கடப்பா: ரூ,500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார்.
ஆந்திராவின் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் 3 நாள் மகாநாடு தொடங்கியது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
டிஜிட்டல் கரன்சி குறித்த அறிக்கையை பிரதமரிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தேன். அதில் ரூ.500, ரூ.1000, ரூ.2000 ஆகிய நோட்டுகளை ஒழிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினால் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். இந்த நடவடிக்கை அரசியல் கட்சிகளுக்கும் பலன் அளிக்கும்.
புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை நீக்குவது பல நன்மைகளை தரும். ரூ.500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும். இந்த மாநாட்டில் இதை வலியுறுத்துகிறேன்.
தெலுங்கு தேசம் எப்போதும் தூய்மை அரசியலைத்தான் விரும்புகிறது. கறுப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை. இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ அதையே தான் நாளை இந்தியா நினைக்கிறது.
தேர்தலில் ஓட்டுகளுக்காக மக்களுக்கு பணம் தர வேண்டியது இல்லை. மக்களுக்கு நல்லது செய்தால் ஓட்டுகள் தானாகவே கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.











